சீனாவில் வலைதள பயன்பாட்டாளர்களால் “பனிச் சிறுவன்” என்று வருணிக்கப்படும் 8 வயது சீன மாணவன், குழந்தை பருவத்தில் வறுமை பற்றிய விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளார்.
குளிரால் வீங்கிய கைகளாலும், தலை முடியிலும். புருவங்களிலும் பனி உறைந்திருந்த நிலையிலும் பள்ளிக்கூடம் வந்தடைந்திருந்த இந்த சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பின்னர் குழந்தை பருவ வறுமை பற்றிய விவாதம் சீனாவில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
சீனாவில் கிராமப்புறங்களிலுள்ள குடும்பங்களில் வாழும் ஏழை சிறுவர்களுக்கு உதவ போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை திங்கள்கிழமை வலைதளங்களில் வைரலான “லிற்றில் வாங்” என்ற சிறுவனின் புகைப்படங்கள் எடுத்துக்காட்டுவதாக பல வலைதள பயன்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள யுன்னான் மாகாணத்தின் லுதியான் வட்டத்திலுள்ள பள்ளிக்கு செல்வதற்கு இந்த லிற்றில் வங் சிறுவன் மேற்கொள்ளும் கடினமான பயணங்களை பார்த்து அவர்கள் பரிதாபப்படுகிறார்கள்
பள்ளிக்கூடத்திற்கு இந்த சிறுவன் 4.5 கிலோமீட்டர் நடந்து செல்வதாகவும், இந்தப் பயணத்திற்கு அவனுக்கு ஒரு மணிநேரம் ஆகிறது என்றும் சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட நாளில், தட்பவெப்பநிலை பூஜியத்திற்கு கீழ் 9 செல்சியஸாக இருந்தது என்றும் அது தெரிவித்திருக்கிறது.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த சிறுவனின் ஒரு புகைப்படம் பல்லாயிரக்கணக்கான மக்களால் பகிரப்பட்டுள்ளது.
வீங்கிய சிவப்பு கன்னங்களோடும் மெல்லிய மேலாடையோடும் இருக்கும் இந்த சிறுவன் சக மாணவர்களால் கேலியாக சிரிக்கப்படுவதை இந்தப் புகைப்படம் காட்டுகிறது.
இன்னொரு புகைப்படம் சிறுவனின் பள்ளிப் பயிற்சிப் புத்தகத்தில் ஏறக்குறைய சிறப்பாக செய்யப்பட்டிருந்த பாடத்திற்கு அருகிலிருக்கும் அழுக்கான, வீங்கிய கரங்களை காட்டுகிறது.
ஜனவரி 8 ஆம் நாள் இந்தப் புகைப்படத்தை எடுத்த வாங்கின் ஆசிரியர், அவற்றை தலைமையாசிரியருக்கும், இன்னும் சில தனி நபர்களுக்கும் அனுப்பியுள்ளார் என்று அரச ஊடகம் தெரிவிக்கிறது,
ஆனால், அவை உடனடியாக உள்ளூர் கவனத்தை ஈர்த்து, பின்னர் தேசிய ஊடகங்களில் கவனம் பெற்று, இணைதளத்தில் மிகவும் வைரலாக பரவலாயின. .
#IceBoy என்ற ஹாஷ்டாக்கில் இந்தப் புகைப்படங்களை ஆயிரக்கணக்கான சீன வெய்போ சமூகதள பயன்பாட்டாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.
‘பீப்பிள்ஸ் டெய்லி’யால் பதிவிடப்பட்ட ஒரு பகிர்வு 2 லட்சத்து 77 ஆயிரம் லைக்குகளை பெற்றிருந்தது.
வாங்கின் பொறுமை மற்றும் விடாமுயற்சியை பல வெய்போ பயன்பாட்டாளர்கள் புகழ்ந்து பதிவிட்டுள்ளனர்.
“அறிவு தன்னுடைய தலைவிதியை மாற்றும் என்று இந்த குழந்தை அறிந்துள்ளது” என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.
அந்த சிறுவனை எண்ணி வருந்துவதாக பலர் தங்களுடைய கவலையை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அவருடைய வீங்கிய கரங்கள் மற்றும் மெல்லிய மேலாடையை பார்த்து அவர்கள் கவலையை பதிவிட்டுள்ளனர்.
“அவருடைய உறைந்துபோன சிவப்பு முகம், அவன் மிகவும் மெல்லிய துணி அணிந்துள்ளார். அவனை பார்க்கவே பரிதாபமாக உள்ளது” என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.
சிலர் அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். “இதற்காக உள்ளூர் அரசு என்ன செய்கிறது” என்று ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
தங்களுடைய நன்கொடைகள் மூலம் இந்த சிறுவனுக்கு உதவலாம் என்று பிறர் வலியுறுத்தியுள்ளனர்.
“மண்ணும் செங்கலாலும் ஆன இந்த சிறுவனின் வீடு”
இந்த சிறுவன் எவ்வாறு வாழ்ந்து வருகிறான் என்று அறிவதற்காக பிரபல பியர் வீடியோ இணையதளத்தின் பத்திரிகையாளர்கள் சென்றுள்ளனர்.
“அவனுடைய வீடு மண்ணாலும், செங்கலாலும் செய்யப்பட்டிருந்தது என்றும், மிகவும் இடிந்து தகர்ந்து காணப்படுகிறது என்றும் பியர் வீடியோ இணையதளம் தெரிவித்தது.
தங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து வாழ்வதற்காக நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள பெற்றோரை கொண்டுள்ள பல மில்லியன் கணக்காக குழந்தைகளில் இவன் ஒருவன் என்று இந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
வாங்கும், அவனது சகோதரியும் பாட்டியோடு வாழ்கிறார்கள். அவன் தன்னுடைய தந்தையை பார்ப்பதே அரிது. அவர் 4 அல்லது 5 மாதங்களில் ஒரு முறைதான் வீட்டுக்கு திரும்பி வருவார்.
அவர் சிறியவனாக இருந்தபோதே அவனுடைய தாய் அவனை விட்டுவிட்டு சென்றுவிட்டதாக இந்த சிறுவன் பியர் வீடியோ குழுவிடம் தெரிவித்திருக்கிறான்.
பெற்றோரால் கிராமங்களில் கைவிடப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மேலதிக உதவிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வாங் சிறுவனின் சம்பவம் சீனாவில் எழுப்பியுள்ளது. -BBC_Tamil