நாட்டின் நீதித்துறை தலைவர் ஆயதுல்லா சாதிக் அமொலி லாரிஜானீ மீது தடைகள் விதித்து, அமெரிக்கா தனது “எல்லையை மீறிவிட்டதாக” இரான் கூறியுள்ளது.
இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என சூளுரைத்துள்ள இரான், என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை.
சக்தி வாய்ந்த ஆறு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யவும் அந்நாடு மறுத்துவிட்டது.
இரான் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், உரிமை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டின் 14 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.
2015ஆம் ஆண்டு உலகின் சக்தி வாய்ந்த ஆறு நாடுகள் மற்றும் இரான் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள “மோசமான குறைகளை” சரிசெய்ய ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவிற்கு “கடைசி வாய்ப்பு” அளிப்பதாக டிரம்ப் கூறினார்.
இரானின் யுரேனிய செறிவூட்டல் மீது நிரந்தர தடை விதிக்க, கையெழுத்திட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை விரும்புகிறது. தற்போதைய ஒப்பந்தத்தின் கீழ் அத்தடை 2025ல் முடிவடைகிறது.
அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்ந்து, இரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியிருந்தாலும், பயங்கரவாதம், மனித உரிமை மீறல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை மேம்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில் இரான் மீது அமெரிக்கா தடை விதித்துவருகிறது.
“இரான் சிறைக் கைதிகளை சித்திரவதை செய்து மனிதாபிமானமற்ற முறையில் நடத்த” அந்நாட்டின் நீதித்துறை தலைவர் ஆயதுல்லா சாதிக் அமொலி லாரிஜானீதான் காரணம் என அமெரிக்க கருவூலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அணுசக்தி சாராத நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா விதித்துள்ள தடைகள், 2015 உடன்படிக்கை மூலம் தாம் எதிர்பார்த்த நிதிப் பலன்களை இல்லாமல் செய்துள்ளது என்று இரான் குற்றஞ்சாட்டியுள்ளது. -BBC_Tamil