பாகிஸ்தானில் தொடரும் சிறுமிகள் வல்லுறவு: அங்கே இது ‘நிர்பயா’ தருணமா?

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் அனுபவித்த அந்த கோர உணர்வு மீண்டும் வருகிறது.

டெல்லியில் ஓடும் பேருந்தில் ஜோதி சிங் (நிர்பயா) பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டபோது எனக்கு உடல் நலம் இல்லாமல் போனதும், எனக்கு உண்டான அச்ச உணர்வு, சோகம், கோபம் அனைத்தும் நினைவுக்கு வருகிறது. நான் தொலைவில் இருந்தது ஒரு பொருட்டல்ல.

கசூர் நகரில் ஏழு வயது சிறுமி ஜைனப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, அவளது சிதைந்த உடல் குப்பைகளுக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்டு இப்போது ஒரு வாரத்துக்கும் மேல் ஆகிறது. அதனால் பாகிஸ்தான் முழுதும் கொந்தளிப்பு நிலவுகிறது. எனக்கு கோபமும் வருத்தமும் மீண்டும் வருகிறது.

இந்த ஒரு வார காலத்தில் இன்னும் பல பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நடந்துள்ளன.

வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட முதல் குழந்தை ஜைனப் அல்ல. இஸ்லாமாபாத்தில் உள்ள ‘சாஹில்’ எனும் குழந்தைகள் உரிமை அமைப்பின் கூற்றுப்படி பாகிஸ்தானில் நாளொன்றுக்கு 11 குழந்தை பாலியல் தொந்தரவு சம்பவங்கள் நடக்கின்றன.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் காவல் துறை தலைவர் நீதிமன்றத்தில் அளித்த தகவலின்படி, அந்த மாநிலத்தில் மட்டும் கடந்த 2016ஆம் ஆண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக 107 வழக்குகள் பதிவாகியுள்ளன. அது 2017இல் 128ஆக உயர்ந்துள்ளது. எனினும், ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

“வலுவற்ற ஆதாரங்கள் மற்றும் சிக்கலான சட்ட நடைமுறைகளே இந்த வழக்குகள் தேங்க காரணம்,” என்று கூறும் சாஹில் அமைப்பின் செயல் இயக்குனர் முனிசே பானு, “குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி, குற்றத்தில் ஈடுபட நினைக்கும் பிறருக்கு எச்சரிக்கையை ஏற்படுத்த வேண்டும்,” என்கிறார்.

நிர்பயா டெல்லியில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட முதல் பெண் இல்லை.எனினும், அவர் வல்லுறவு செய்யப்பட்ட விதம் குறித்து பரவிய தகவல்கள் மக்களை கோபமூட்டி, வீதியில் இறங்கிப் போராட்ட வைத்தது. அவரை வல்லுறவு செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டது இந்தியாவில் ஒரு வரலாற்றுத் தருணமானது.

பாகிஸ்தானிலும் இப்போது அதே சூழல்தான் நிலவுகிறது. ஜைனப் கொடூரமாக கொல்லப்பட்டதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. 2012இல் இந்திய மக்களுக்கு இருந்த அதே கோபம் இப்போது பாகிஸ்தான் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் கசூர் நகரில் வல்லுறவு செய்யப்படும் 12வது சிறுமி ஜைனப். அவர்களில் குறைந்தது ஒன்பது சிறுமிகளை வல்லுறவு செய்தது ஒரே நபராக இருக்கலாம் என்று காவல் அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால், இன்னும் அந்த நபரைப் பிடிக்க முடியவில்லை.

கசூரில் கடந்த 2015இல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, செல்பேசியில் படம் பிடிக்கப்பட்ட செய்தி வெளியானது பல நாள்கள் அந்நகரை உலுக்கியது.

அதைத் தொடர்ந்து குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலை குற்றம் என்றும் அக்குற்றத்தில் ஈடுபட்டால் ஏழு ஆண்டுகள் சிறை என்றும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது. இதற்கு முன்பு வரை பாலியல் வல்லுறவு மட்டுமே குற்றமாகக் கருதப்பட்டது .

எனினும் அது கசூர் நகர குழந்தைகளுக்கு நீதி வழங்கவில்லை. இதற்கு முந்தைய வழக்கில் வெறும் இரண்டு நபர்களே தண்டிக்கப்பட்டார்கள். பலர் விடுதலை செய்யப்பட்டனர் அல்லது பிணை வழங்கப்பட்டது.

ஜைனப் கொலை வழக்கு பெரும் ஊடக விவாதத்தை தூண்டியுள்ளது. பெற்றோர் மற்றும் சமூகத்தின் தோல்வி விவாதிக்கப்பட்டு வருகிறது.

பொறுப்புள்ள குழந்தை வளர்ப்பு, விலக்கப்பட்டதாக கருதப்படும் விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக குழந்தைகளிடம் பேசுவது உள்ளிட்டவற்றை செயல்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

‘உதாரி ‘ எனும் குழந்தைகள் மீதான வன்முறை குறித்த நாடகத்தில் நடித்த நடிகர் ஆசன் கானும் அவர்களில் ஒருவர். அந்தப் படம் வெளியானபோது அவரும், அவரது குழுவினரும் விமர்சிக்கப்பட்டனர்.

அது ஒளிபரப்பப்பட்டபோது எழுந்த புகாரால் தொலைக்காட்சிகள் சற்று நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

“இத்தகைய சம்பவங்களை மறைத்து, பாதிக்கப்பட்டவர்களையே நாம் இழிவாக பார்க்கிறோம்,” என்கிறார் அந்த நடிகர்.

இப்போது ஜைனப் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. பாலியல் வன்கொடுமை குறித்த பாகிஸ்தான் சமூகத்தின் மனநிலை மாற வேண்டும்.

இந்தியாவில் நிர்பயாவின் வல்லுறவுக்கு பிறகு நிலைமை மாறியுள்ளது. பெண்களுக்கு எதிரான மனநிலையைப் போக்க பரப்புரைகள் செய்யப்படுகின்றன. பெண்கள் சமூகத்தில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். பெண்கள் பிரச்சனைகள் குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் வலுவாக்கப்பட்டுள்ளன.

இப்போது பாகிஸ்தானில் இருப்பதும் ஒரு ‘நிர்பயா’ தருணமா? ஜைனப் கொலை குறித்து எழுந்துள்ள கோபம் அர்த்தமுள்ள பலனைத் தருமா? வருங்கால ஜைனப்களின் உயிரும் கண்ணியமும் காக்கப்படுமா? அல்லது இந்த ஜைனபுக்குப் பின் மீண்டும் இன்னொரு ஜைனப் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்படும் நிலை வருமா?

ஒரு நாடாக பாகிஸ்தானுக்கு எளிதில் மறக்கும் நோய் இருப்பதை வரலாறு காட்டுகிறது. -BBC_Tamil