குவைத்தில் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வரும் பிலிப்பைன்ஸ், குவைத்திற்கு தொழிலாளர்களை அனுப்புவதையும் நிறுத்தியுள்ளது.
குவைத்தில் உள்ள முதலாளிகளின் தொந்தரவு காரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் இறந்ததாக அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே கூறியிருந்தார்.
எண்ணெய் வளமிக்க குவைத் நாட்டில், பிலிப்பைன்ஸ் பெண்கள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தனக்கு தெரியும் எனவும் ரொட்ரிகோ டுடெர்டே கூறியுள்ளார்.
ஜனவரி மாத தொடக்கத்தில் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் குவைத்தில் தற்கொலை செய்துகொண்டது முதல் இந்த பிரச்சனை உருவெடுத்தது. பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் அப்பெண்ணின் உடலில் காணப்பட்டதாக அவரின் குடும்பத்தின் கூறியிருந்தனர்.
இது குறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகளை தொடர்புக்கொன்று பேசியுள்ளதாக குவைத் கூறியுள்ளது.
பிலிப்பைன்ஸ் வெளியுறத்துறையின் கணக்கின்படி, 2.5 லட்சத்திற்கும் அதிகமான பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் குவைத்தில் உள்ளனர். அதில் பெரும்பாலோனோர் வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்கின்றனர்.
செளதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளில் 2.3 மில்லியன் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். -BBC_Tamil