ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள சொகுசு ஹொட்டலில் ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 30ஐ விட அதிகமாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
இத்தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 5 என்றே ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர், 18 எனக் கூறப்பட்டது. தற்போது, 30 என, அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். உள்ளூர் ஊடகங்களோ, 43 என்றும் அதை விட அதிகம் என்றும் கூறுகின்றன. எனவே, உறுதியான ஓர் எண்ணிக்கை இல்லாத நிலைமையே, நேற்று (22) வரை காணப்படுகிறது.
உயிரிழப்புகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர், நகரத்திலிருந்து 19 சடலங்கள், வைத்தியசாலைகளுக்குக் கொண்டுவரப்பட்டன எனவும், அவற்றுள் 6 சடலங்கள், வெளிநாட்டவரின் சடலங்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், ஆப்கான் பாதுகாப்பு அதிகாரியொருவர், உயிரிழந்தோரின் எண்ணிக்கையை 30க்கும் அதிகம் என்று குறிப்பிட்டதோடு, இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்குமெனவும் எதிர்வுகூறினார்.
உயிரிழந்த பொதுமக்களுக்கு மேலதிகமாக, தாக்குதலை மேற்கொண்ட தாக்குதலாளிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில், உக்ரைனைச் சேர்ந்த 6 பேர் உள்ளடங்குகின்றனர் என, அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சுத் தெரிவிக்கிறது.
இத்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், ஹொட்டலுக்குள் இருந்து 150க்கும் மேற்பட்டவர்கள் தப்பித்தனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் விமான சேவையான கம் எயார் கருத்துத் தெரிவிக்கும் போது, தமது நிறுவனத்தின் விமானிகள், பணியாளர்கள் என, சுமார் 40 பேர், அந்த ஹொட்டலில் தங்கியிருந்தனர் எனவும், அவர்களுள் பலர் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவித்ததோடு, அவர்களுள் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தது.
இத்தாக்குதலை, தலிபான்களே நடத்தினர் என, அக்குழு உரிமை கோரியுள்ளது. தாக்குதல் நடத்தப்படும் போது ஹொட்டலுக்குள் இருந்தவர்களின் கருத்துப்படி, வெளிநாட்டவர்களை இலக்குவைத்தே, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் கூட, தாங்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று பொய் கூறிய போது, அவர்கள் உயிருடன் விடப்பட்டனர் எனக் கூறப்படுகிறது.
மிகவும் பாதுகாப்பான பகுதிக்குள் அமைந்துள்ள இந்த ஹொட்டலுக்குள், ஆயுததாரிகள் எவ்வாறு வந்தனர் என்பதே, தற்போதைய கேள்வியாக உள்ளது. ஆனால், அந்நாட்டு அமைச்சர் ஒருவரின் கருத்துப்படி, இந்த ஹொட்டலின் பாதுகாப்பு, பொலிஸாரின் கட்டுப்பாட்டிலேயே இவ்வளவு நாளும் காணப்பட்டது எனவும், இவ்வாண்டு ஆரம்பம் முதலே, தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றின் பாதுகாப்புக்குக் கீழ் கொண்டுவரப்பட்டது எனவும், அதுவே தாக்குதலுக்கான காரணமாக அமைந்தது எனவும் கூறப்படுகிறது. குறித்த நிறுவனத்துக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டது என, அவர் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டினார்.
-tamilmirror.lk