”நான் காதலில் விழுந்தேன், ஆனால் ஏன் என எனக்குத் தெரியாது” தனது அன்புக்குரியதின் மீது நீண்ட நேரம் தனது பார்வையை செலுத்தியவாறு கூறுகிறார் அலா அல் சயீத்.
இந்த சிரிய வரலாற்று ஆசிரியர் காதலில் விழுந்தது பாப் அல் நசரின் பழைமையான வாயிலான தி விக்டரி வாயில் மீது.
அலெப்போவின் பழைய நகரத்துக்குச் செல்லும் பாதையில் உள்ள மற்ற வரலாற்று நுழைவு வாயில்களை போலவே தடிமனான கற்களால் ஆன இந்த வாயிலும் இங்கு நடந்த உள்நாட்டுப் போரில் உருக்குலைந்தது.
ஒரு வருடத்துக்கு முன் நிறைவடைந்த அலெப்போவுக்கான கடுமையான போரில், மிகவும் ரத்தம் சிந்தப்பட்ட இடமான, இடைக்காலத்தில் எழுப்பப்பட்ட சுவர்சூழ் நகரத்தின் மிகவும் மோசமாக சிதிலமடைந்த வாயில்களில் பாப் அல் நசரின் வாயிலும் ஒன்றல்ல.
ஆனால் சிதிலமடைந்த இந்த நகரத்தை சிரிய மக்கள் தங்களால் முடிந்தவரை கொஞ்சம் கொஞ்சமாக சீர் செய்கிறார்கள். கொண்டாடப்பட்ட ஒரு நகரம் இப்படித்தான் வேதனையான மற்றும் வலிமிகுந்த செயல்முறையில் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது.
பழைய அலெப்போவின் பாரம்பரியத்தை புதுப்பிக்கவும், அடிப்படை வசதிகளை மீண்டும் தந்து நவீன நகரத்தை இயக்கத் தேவைப்படும் கண்ணீர் வரவழைக்கக் கூடிய தொகையை தருவதற்கு அரசு உட்பட யாரும் இல்லை. பல பில்லியன் டாலர் தொகை இந்த நகரத்தைச் சீரமைக்க தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
”பாப் அல் நசரின் நண்பர்கள் என ஒரு சிறிய குழுவை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். நாங்கள் பணக்காரர்கள் இல்லை. ஆனால், எங்கள் நகரத்துக்காக செலவழிக்க எங்களிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது” என அலா என்னிடம் கூறினார்.
சண்டை நடந்த இந்த நகரத்தின் தெருக்களில் இன்னமும் கட்டட இடிபாடுகள் மற்றும் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் விரவியுள்ளன. ஒரு குழந்தையின் ஷூ, ஒரு உலோக தேநீர், பாத்திரம், ஒரு டி ஷர்ட் என எல்லாம் தங்களின் வாழ்வை இங்கே தொலைத்து வெளியேறியவர்களின் எச்சங்களாக உள்ளன. யுத்தம் இந்த நகரின் இயற்கையான தோற்றத்தை சிதைத்திருக்கிறது. கட்டடங்கள் மற்றும் வரிசையாக உள்ள வீடுகளின் முகப்பக்கம் வெடித்துச் சிதறியிருக்கிறது.
மோசமாக பாதிப்புக்கு உள்ளான வீட்டினரின் ஒருவரான உம் கலீல் இதுவரை தன்னால் என்ன சரி செய்ய முடிந்தது என்பதை காட்டினார். இந்த பெண்ணின் குடும்பம் வாழும் வீட்டின் மேற்கூரையானது மேலோட்டமான பிளாஸ்திரி ஓட்டுகள் போட்டு பழுதுபார்க்கப்ட்டுள்ளது. ஜன்னல் சட்டங்கள் குறைபாடுகளோடு மூடப்பட்டிருக்கின்றன. அங்கே மின்சாரமோ குழாய் தண்ணீர் வசதியோ இல்லை.
” நாங்கள் மேற்கூரைக்காக கடன் வாங்கினோம். அங்குள்ள ஒரு உருக்குலைந்த சோபா தான் குழந்தைகளுக்கு தங்குமிடமாக இருக்கிறது. எங்களிடம் உள்ள ஒரே மரச்சாமான் அதுதான்” என அவள் கூறினாள். அப்பெண்ணின் கணவன் வெறுமையாக பார்த்தார். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பின் அளவை அவரது வெறுமையான பார்வை உணர்த்தியது. நொறுங்கிப்போன வாழ்வை சீர்படுத்துவதே மிகவும் கடினமான விஷயம்.
” என்னுடைய கணவன் இப்போது வேலை செய்ய முடியாது. ஏனெனில் அவரது தொழிற்சாலை அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை மீண்டும் சரி செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம்” என விளக்குகிறார் உம் கலீல்.
சிரியாவின் தொழில்துறையின் இதயமாக இருந்த அலெப்போவின் பொருளாதார இயந்திரமாக சிறு மற்றும் பெரு தொழிற்சாலைகள் விளங்கின. தற்போது, நகரத்தின் விளிம்பில் இருக்கும் லெய்ராமோன் தொழிற்சாலை மண்டலமானது இந்த நகரத்தின் பெரும் பகுதிகள் அழிவதற்கு காரணமாக இருந்த சண்டைகளுக்கு சாட்சியாய் விளங்குகிறது.
மத்திய கிழக்கு பகுதிகளில் மிகப்பெரிய தயாரிக்கும் கூடமாக விளங்கிய தனது பிளாஸ்டிக் தொழிற்சாலையை முதலில் பார்த்தவுடன் எழும்பிய உணர்வின் வெளிப்பாட்டைக் கூற ” எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது” என பாசெல் நஸ்ரி குறிப்பிடுகிறார். ” அது மிகவும் கோரமானது. அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது” என தனது தொழிற்சாலையை பற்றி குறிப்பிடுகிறார்.
உண்மையில், தனது குடும்பத் தொழிலில் திட்டமிட்டு அழிவு ஏற்பட்டது குறித்த தினசரி அறிக்கைகள் மற்றும் கடும்போக்கு இஸ்லாமியவாதிகளின் சூறையாடல் காரணமாக அவருக்கு மாரடைப்பு சற்று முன்கூட்டியே ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலத்தில் ஒரே ஒரு ஜவுளி தொழிற்சாலை மட்டுமே மௌனத்தை சிதறச் செய்யும் வகையில் சத்ததுடன் மீண்டும் இயங்கத் துவங்குகிறது. அங்குள்ள பல இயந்திரங்களில் பல சீனாவால் வெளியேற்றப்பட்டவையாகும். அதிபர் பஷர் அல் அஸாத்தின் கூட்டாளியான சீனாவில் இருந்துதான் சிரியா உதிரி பாகங்களை பெறுகிறது. அந்த தொழிற்சாலையின் தளத்தின் மற்றொரு பகுதியில் பெரும் இயந்திரங்கள் அமைதியாக இருக்கின்றன. அவை எதிர்கட்சியின் முக்கிய ஆதரவாளரான பிரிட்டனில் செய்யப்பட்டதாகும்.
போர் இன்னும் முடிந்துவிடவில்லை
”மறுகட்டமைப்புக்கு நிறைய நேரமும் நிறைய பணமும் தேவைப்படும் ஆனால் எங்களுக்கு இப்போது உண்மையில் தேவை என்னவெனில் மேற்குலக நாடுகள் விதித்துள்ள தடைகளை விலக்கிக்கொள்ள வேண்டும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய எங்களுக்கு உதவ வேண்டும்” என விளக்குகிறார் நஸ்ரி. இவர் அலெப்போ தொழில்துறை அலுவலகத்தின் துணை தலைவராவார்.
ஆனால் போர் இன்னும் முடிந்து விட வில்லை. ”அஸ்ஸாத் ஆட்சி மற்றும் எந்த நாட்டுக்கும் இடையே பொருளாதார உறவுகள் ஏற்படுவதை நாங்கள் ஊக்கப்படுத்த மாட்டோம்” என அமெரிக்க அரசு செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் தனது சமீபத்திய பேச்சில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த எதிர்ப்பு மறுசீரமைப்பு முயற்சிகளுக்கான சவால்களுக்கு எரிபொருளாக அமைகிறது. அதேசமயம் பழைமையான கோட்டைகளில் கற்சுவர்களின் மீது #Believe_ in_ Aleppo என்ற ஹேஷ்டேக் எழுதப்பட்ட விளம்பர பதாகைகளில் உள்ளன அதற்கடுத்து புன்னகையுடன் இங்கு தங்குவதற்கான நம்பிக்கையை அறிவிக்கும் வண்ணமுள்ள அதிபரின் விளம்பர பலகை இடம்பெற்றுள்ளது.
கிளர்ச்சி நடந்த அருகாமை பகுதிகளில் பள்ளிகள் சீரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன. ”எங்களின் ஆன்மாவோடு எங்களின் ரத்தத்தால், நாங்கள் பஷர் ஆகிய உங்களுக்காக தியாகம் செய்கிறோம்” என கிழக்கு அலெப்போவில் உள்ள மிகப்பெரிய பள்ளியில் தேசபக்தி பற்றிய பாடலுக்கு பள்ளிக் குழந்தைகள் பாடுகின்றனர். நகரின் மேற்குப்பகுதியில் உள்ள பள்ளிகளில் இப்போது பெரிய அளவில் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
” நாம் நாட்டை நேசிக்கிறோம் என்றால் நாம் நமது அதிபரை நேசிக்க வேண்டும்” என பாடசாலை வளாகத்தில் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்த போது என்னிடம் கூறினார் முஹம்மத் பயாஜீத். இந்த வளாகமானது குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் மற்றும் குழந்தைகளின் விளையாட்டுகளோடு மீண்டும் நிரம்பியிருக்கிறது. ” கடந்த மாதத்தை விட இப்போது நிலைமை பரவாயில்லை. மேலும், இந்த நிலை தொடர்ந்து முன்னேறும்” என முஹம்மத் என்னிடம் கூறினார்.
நகரத்தின் ஒப்பீட்டாளவில் செல்வந்த மேற்குப் பகுதிகள் இந்த போரின் தாக்கத்தை தாங்கவில்லை. ஆனால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் முற்றுகை மற்றும் சீரற்ற தாக்குதல்களின் பயத்துக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர்.
அலெப்போ மக்களில் பெரும்பாலோனோர், அதிபரின் தீவிர ஆதரவாளர்களை தவிர மற்றவர்கள் அரசியலைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க தயங்குகிறார்கள்.
” போருக்கு பிறகு, மக்களிடம் சில மாற்றங்கள் உள்ளன, நகரில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என்பதை சிரிய புகைப்பட கலைஞர் மற்றும் திரைப்பட இயக்குனர் இஸ்ஸா டவுமா பிரதிபலிக்கிறார். இவர் நகரின் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வலிகளை பதிவு செய்துள்ளார். ” மக்களில் சிலர் எப்போதும் திரும்பி வரமாட்டார்கள், அலெப்போவின் சில பகுதிகளும் இருக்காது” என்கிறார் இவர்.
நகரின் தொழில்முனைவோருக்கே உண்டான முனைப்போடு டிரக்குகளில் இனிப்பு காபி மற்றும் டி இங்கே விற்கப்படுகின்றன.
”ஒவ்வொரு மாதமும் நீங்கள் இங்கே சிறிய முன்னேற்றத்தை பார்க்கின்றீர்கள்” என டௌமா நம்பிக்கையுடன் கூறுகிறார். ”அதைத்தான் மக்கள் இப்போது இங்கே கவனம் செலுத்த விரும்புகிறார்கள்” என்றவர், ”அரசியல் இன்னமும் அவர்களது மனதில் இருக்கிறது” என்றார். -BBC_Tamil