பாகிஸ்தான் சிறுமி கொலை : 1,150 பேரின் டி.என்.ஏ சோதனைக்குப் பிறகு சந்தேக நபர் பிடிபட்டார்

பாகிஸ்தானில் 6 வயதான ஜைனப் என்ற சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சந்தேச நபரை கைது செய்துள்ளதாக பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷரீஃப் அறிவித்துள்ளார்.

அந்த சந்தேக நபர் 24 வயதான இம்ரான் அலி என லாகூரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பஞ்சாப் முதல்வர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கசூர் நகரை சேர்ந்த இம்ரான் அலி தொடர் கொலையில் ஈடுபட்டவர். இரண்டு வருட காலத்தில், 6-7 பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

இம்ரான் அலி குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பஞ்சாப் முதல்வர் கூறுகிறார். குற்றவாளியைக் கண்டுபிடிக்க, 1,150 பேரின் டி.என்.ஏ சோதிக்கப்பட்டதாகவும், ஆனால், கசூர் நகரில் குற்றம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் இம்ரான் அலியின் டி.என்.ஏ 100 சதவீதம் ஒத்துப்போவதாகவும் பஞ்சாப் முதல்வர் கூறியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்படும் நபரிடம் இருந்தோ அவரது வழக்கறிஞர்களிடம் இருந்தோ உடனே எந்த கருத்துகளும் வரவில்லை.

சிறுமி ஜைனப் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வழி வகுத்தது. போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர்.

பல நாட்களாகக் காணாமல் போன ஜைனப்பின் உடல், இந்த மாத தொடக்கத்தில் குப்பைகளுக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமி ஜைனப்பின் தந்தை அமீன் அன்சாரியும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். வழக்கு நடக்கும் விதம் திருப்திகரமாக இருப்பதாக அவர் கூறினார்.

சந்தேக நபர் இம்ரான் அலி, ஜைனப்பின் குடும்பத்திற்கு தெரிந்தவர் என ஜியோ செய்திகள் கூறியிருந்தது. ஆனால், இம்ரான் தனது உறவினர் என கூறப்படும் வதந்திகளை அமீன் அன்சாரி மறுத்தார். -BBC_Tamil