கென்யாவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்று தீப்பிடித்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
கென்யாவின் தலைநகரமான நைரோபியில் உள்ள லங்கடா என்ற பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க மக்கள் கழிவு நீரை பயன்படுத்தினர்.
இந்நிலையில், தீயணைப்பு வாகனங்களில் போதிய தண்ணீர் இல்லை என அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிக்சொன் கொரிர் தெரிவித்தார்.
10 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்து வரும் நிலையில், இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீயில் சேதமடைந்த கட்டடங்கள் அகற்றப்படும் போது, அதிக உடல்கள் காணப்படலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், தீயணைப்புத்துறை தீயை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைய, அந்நாட்டின் அரசு மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அரசாங்கத்தின் தோல்வி
”தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது இது முதல் முறையல்ல. வாகனங்களில் நீரை நிரப்ப, கிஜிஜி குடியிருப்பில் இருந்து நகரத்தின் மையத்திற்கு 20 கிமீ பயணம் செய்ய வேண்டும். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில், தீயை அணைக்க போதிய வசதிகள் இல்லாததால் கழிவு நீர் உட்பட அங்கு கிடைத்தவற்றை வைத்து மக்கள் அதனை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.” என்கின்றார் பிபிசி செய்தியாளர் ஃபெர்டினன்ட் ஒமொன்டி.
தங்கள் வீடுகளை இழந்து சுமார் ஆறாயிரம் மக்கள் இருக்க, வெறும் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மட்டுமே அப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
நய்ரோபியின் கவர்னர் இச்சம்பவம் குறித்து இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. -BBC_Tamil