2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையில் அமெரிக்கப் புலனாய்வு துறை 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளது.
இவர்களில் 3 பேர் இணையம் தொடர்பில் சதி செய்ததாகவும், 5 பேர் அடையாள திருட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது பற்றிய விசாரணை மேற்கொண்டு வருகின்ற சிறப்பு வழக்குரைஞர் ராபர்ட் முல்லரால் இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 ரஷ்ய நிறுவனங்கள் மீதும் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களில் ஒன்றான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள இணைய ஆய்வு நிறுவனம், 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அமெரிக்க அரசியல் அமைப்பில் குழப்பம் விளைவிக்கும் திட்டத்தோடு செயல்படுவதாக, 37 பக்கங்கள் கொண்ட இந்த குற்ற அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய சட்டப்பூர்வமற்ற செயல்பாட்டில் எந்தவொரு அமெரிக்கரும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படவில்லை என்றும், இத்தகைய தலையீடு அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை மாற்றியமைத்தது என்று குறிப்பிடப்படவில்லை என்றும் துணை அட்டர்னி ஜெனரல் ராட் ரோஸ்ஸ்டன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக வெள்ளிக்கிழமை காலையில் அதிபர் டிரம்பிடம் விளக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் தெரிவித்தார்.
தன்னுடைய அதிபர் தேர்தல் பரப்புரையில் எவ்வித தவறையும் செய்யவில்லை என்று பின்னர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதினின் செஃப் என்று அறியப்படும் இவ்ஜெனி பிரிகோசின் என்பவரும் குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டுள்ளார். ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். -BBC_Tamil