- கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். கடந்த எட்டாண்டுகளாக இவர்களின் கொலைவெறிக்கு சுமார் 20 ஆயிரம் மனித உயிர்கள் பலியாகியுள்ளன.
இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி நகரில் உள்ள மீன் மார்க்கெட்டில் நேற்றிரவு 8.30 மணியளவில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூன்று பேர் நடத்திய தாக்குதல்களில் 19 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 70 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.