நஸ்ரி, அமைதியாக கூடுவதற்கு வகை செய்யும் மசோதாவைச் சமர்பித்தார்

அமைதியாக கூடுவதற்கு அனுமதிக்கும் மசோதாவை அரசாங்கம் இன்று மக்களவையில் சமர்பித்தது. அந்த மசோதாவை முதல் வாசிப்புக்கு பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் இன்று தாக்கல் செய்தார்.

அந்த உத்தேசச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

– கூட்டம் நடத்துவதற்கு, உள்துறை அமைச்சர் வரையறுத்துள்ள குறிப்பிடப்பட்ட இடங்களைத் தவிர, 30 நாட்கள்  முன்னரே அறிவிப்பு கொடுக்க வேண்டும்.

– அறிவிப்பு கொடுத்த பின்னர் போலீஸ் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்காமல் இருந்தால் கூட்டம் நடைபெறலாம்.

– தெரு ஆட்சேபங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது

– மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பட்டியலில் இடம் பெற்றுள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளைச் சுற்றிலும் உள்ள 50 மீட்டர் இடைப்பகுதியிலும் அதற்குள்ளும்  ஆர்ப்பாட்டம் அனுமதிக்கப்பட மாட்டாது.

–  விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கு தாம் அவசியமானது எனக் கருதும் நடவடிக்கைகளை போலீஸ் அதிகாரி ஒருவர் எடுப்பதற்கு 8வது பிரிவு அனுமதி அளிக்கிறது.

– திட்டமிடப்பட்ட கூட்டத்துக்கு முன் கூட்டியே போலீசாருக்கு அறிவிப்பு கொடுக்கப்படாமல் இருந்தால்

– ஏற்பாட்டாளர்களுக்கு 10,000 ரிங்கிட் வரையில் போலீசார் அபராதம் விதிக்க பிரிவு 9(5) வகை செய்கிறது.

–  கூட்டத்துக்கு குழந்தைகளைக் கொண்டு வர அனுமதிக்கும் அல்லது சேர்க்கும் யாரையும் கைது செய்வதற்குப் போலீசாருக்கு 20( 1)(c) பிரிவு அனுமதி அளிக்கிறது.

– கைது செய்யப்படுகின்றவர்களுக்கு 20,000 ரிங்கிட் வரையில் அபராதம் விதிப்பதற்கு 20(1)(c) பிரிவு அனுமதி அளிக்கிறது.

– 21 வயதுக்கு உட்பட்டவர்கள் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்

– 15 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் சவ அடக்க ஊர்வலம் அல்லது உள்துறை அமைச்சர் அனுமதி அளிக்கும் நிகழ்வுகள் போன்ற பண்பாட்டு அல்லது சமய நிகழ்வுகள் தவிர கூட்டங்களில் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பெரும்பாலும் அந்த மசோதா அடுத்த வாரம் இரண்டாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்படும். அதனுடன் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதற்கு முன்கூட்டியே போலீஸ் அனுமதியைப் பெற வேண்டும் என்ற தேவையை நீக்கும் போலீஸ் சட்டத் திருத்த மசோதாவும் இன்று சமர்பிக்கப்பட்டது.