அமைதியாகக் கூட்டம் நடத்த வகைசெய்யும் மசோதா, அரசமைப்புப்படி கூட்டங்கள் நடத்தவுள்ள உரிமைகளைக் கட்டுப்படுத்த போலீசுக்குக் கூடுதல் அதிகாரம் அளிப்பதாக பக்காத்தான் ரக்யாட் அரசியல்வாதிகளும் சிவில் உரிமை போராட்டவாதிகளும் கொதிப்படைந்துள்ளனர்.
அம்மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அது எந்த இடத்தில் கூட்டம் நடத்தலாம் என்பதை முடிவுசெய்வதில் அரசாங்கத்துக்கும் போலீசுக்கும் விரிவான அதிகாரங்களை வழங்குவதாக அவர்கள் குறை சொன்னார்கள்.
எடுத்துக்காட்டுக்கு, தெரு ஆர்ப்பாட்டங்கள் முற்றாகத் தடுக்கப்படுகின்றன. அத்துடன் உள்துறை அமைச்சர் குறிப்பிடும் இடங்களில் கூட்டங்களை நடத்தக்கூடாது.
கூட்டங்கள் நடத்துவது பற்றி ஏற்பாட்டாளர்கள் 30-நாள்களுக்குமுன்னர் போலீசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்-தவறினால் ரிம10,000 அபராதம் என்று அம்மசோதா கூறுகிறது.
சட்டவிரோதக் கூட்டங்களில் கலந்துகொள்வோருக்கு ரிம20,000 அபராதம் விதிக்கப்படலாம்.
இப்படிக் கூட்டங்கள் நடத்த பல கட்டுப்பாடுகளைப் போடுவதால் அம்மசோதாவை ‘கூட்டம் நடத்த அனுமதிக்கும் சட்டவிரோத மசோதா’ என்று அழைக்கலாம் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் குறிப்பிட்டார்.
“போலீஸ் சட்டத்தைவிட மோசமாகவுள்ளது……
“அபராதம் 20ஆயிரம் ரிங்கிட்டாம். வழிபாட்டு இடங்களுக்கு 50மீட்டருக்கு அப்பால்தான் கண்டனக் கூட்டங்களை நடத்த வேண்டும்.”
இப்போதுள்ள சட்டங்களைவிட இது அதிகம் கெடுபிடியாக உள்ளது என்றாரவர்.
“அதன்படி பார்த்தால் காடுகளில்தான் ஆர்ப்பாட்டம் செய்ய முடியும்போலத் தெரிகிறது. பள்ளிவாசல்களும் ஆலயங்களும் தேவாலயங்களும் எல்லா இடங்களிலும் உள்ளன….அதனால் மலேசியாவில் எங்கும் கூட்டம்போட முடியாது”, என்று பாகான் எம்பியுமான லிம் கூறினார்.
பிகேஆர் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான லத்தீபா கோயா, அம்மசோதா கூட்டரசு அரசமைப்பின் பிரிவு 10க்கு முரணானது என்றார்.
“இம்மசோதா (ஜோர்ஜ்) ஓர்வலின் புகழ்பெற்ற வரிகளை நினைவுப்படுத்துகின்றது. போர் என்பதே அமைதி. சுதந்திரம் என்பதே அடிமைத்தனம். அறியாமையே பலம் என்றாரவர்”, என்று டிவிட்டரில் லத்தீபா குறிப்பிட்டிருந்தார்.
கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் ,இம்மசோதா செப்டம்பர் 15-இல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் மலேசிய தின உரையில் கொடுத்த வாக்குறுதிக்கு “முற்றிலும் மாறானதாக” இருக்கிறதே என்றார்.நஜிப் தம்முரையில் மலேசியர்களுக்குக் கூடுதல் ஜனநாயக உரிமைகள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
“இதுதான் அமைதியாக கூட்டம் நடத்த அனுமதிக்கும் மசோதா நமக்கு வழங்கும் உரிமைகள் என்றால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு மாற்றாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டத்தின்மீதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை”, என லாவ் டிவிட்டரில் கூறியிருந்தார்.