அமைதியாக கூட்டம் நடத்துவதற்கு வகை செய்யும் மசோதாவில் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது நியாயமற்றது, அரசியலமைப்புக்கு எதிரானது என பிகேஆர் கூறுகிறது.
அந்தக் கட்சி reformasi கால கட்டத்தில் சாலைகளில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் உதயமானது.
அந்தக் கட்டுப்பாடு நேர்மையற்றது என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் விடுத்த அறிக்கை கூறியது. அத்துடன் அமைதியாக ஒன்று கூடுவதற்கு கூட்டரசு அரசியலமைப்பின் 10வது பிரிவு வழங்கியுள்ள உரிமைகளையும் அது மீறுகிறது.
“பிரிட்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பின்லாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களில் அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை.”
“அது அனைத்துலக நடைமுறைகளுக்கும் பழக்கங்களுக்கும் ஏற்பவும் இல்லை. மனித உரிமைகள் மீதான ஐநா அனைத்துலகப் பிரகடனத்துக்கு இணங்கவும் இல்லை”, என பிரபலமான மனித உரிமை வழக்குரைஞருமான சுரேந்திரன் சொன்னார்.
தெரு ஆர்ப்பாட்டங்கள், கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு தீங்கற்ற வழக்கமான நடைமுறையாகும் என வாதாடிய சுரேந்திரன் எந்த ஒரு ஜனநாயகத்திலும் அது பிரிக்க முடியாத பகுதி என்றார்.
நவீன ஜனநாயகங்களில் சாலை ஊர்வலங்கள் அமைதியாக நிகழ்வதை உறுதி செய்ய போலீசார் போக்குவரத்தையும் மற்ற விவகாரங்களையும் கவனித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
ஐஜிபி-க்கு விரிவான அதிகாரங்கள்
30 நாள் முன் கூட்டியே அறிவிக்க வேண்டும் என்ற தேவை பற்றிக் குறிப்பிட்ட சுரேந்திரன், அது தேவையற்றது என்றார். கூட்டம் நடத்துவதை கூடிய வரை சிரமமாக்கும் பொருட்டு வேண்டுமென்றே அந்த விதி சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கருதுகிறார்.
“ஒரு பிரச்னை நடப்பு விவகாரம் சம்பந்தப்பட்டதாகவும் அவசர அவசியமாகவும் இருந்தால் நாம் கூட்டம் நடத்துவதற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமா? அரசாங்கத்திடம் மனு கொடுப்பதற்காக ஒன்று கூட நாம் ஒரு மாதம் பொறுத்திருக்க வேண்டுமா?”
“பிரிட்டனில் 1986ம் ஆண்டுக்கான பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் ஆறு நாட்களுக்கு முன்பு அறிவித்தால் போதும். மேற்கு ஆஸ்திரேலியாவில் 4 நாட்களாகவும் தென்னாப்பிரிக்காவில் 7 நாட்களாகவும் பின்லாந்தில் ஆறு மணி நேரமாகவும் அது நிர்ணயிக்கப்பட்டுள்ளது”, என்றார் அவர்.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் தாம் அவசியமெனக் கருதும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனுமதிக்கும் மசோதாவின் 8வது பிரிவு தெளிவற்றதாக உள்ளது. அது தவறாகப் பயன்படுத்தப்படவும் வாய்ப்பு உண்டு என்றும் அவர் மேலும் சொன்னார்.
“பொதுக் கூட்டங்கள் தொடர்பில் போலீஸுக்கு அது கட்டுப்பாடற்ற புதிய அதிகாரங்களை வழங்குகிறது. போலீசார் விதிப்பதற்கு அனுமதிக்கப்படும் எந்த நிபந்தனைகளும் குறைந்த பட்சமாக இருக்க வேண்டும். வரம்புக்கு உட்பட்டிருக்க வேண்டும். மசோதாவில் தெளிவாக கூறப்பட்டிருக்க வேண்டும்”, என்றார் சுரேந்திரன்.
நடைமுறையை சுமையாக்குகிறது
அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், கூட்டரசு அரசியலமைப்பின் 10(1)(b) பிரிவுகளைஅர்த்தமற்றதாக்கியுள்ளன. அந்த மசோதாவே அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
” மக்கள் அமைதியாக ஒன்று கூடுவதை இயன்ற வரையில் சிரமமாக்குவதும் சுமையாக்குவதுமே பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தின் உண்மையான எண்ணம் என்பது அந்த விவரங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.”
“ஆகவே 1967ம் ஆண்டுக்கான போலீஸ் சட்டத்தில் கண்டுள்ள விதிகளைக் காட்டிலும் மோசமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது”, என்றார் சுரேந்திரன்.
ஜனநாயக நடைமுறைகளுக்கு மேலும் இடமளிக்கும் பொருட்டு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக 1967ம் ஆண்டுக்கான போலீஸ் சட்டத்தின் 27வது பிரிவைத் திருத்துவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது மலேசிய தின உரையில் வாக்குறுதி அளித்திருந்தார்.
சில அவசர காலச் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட்ட போதிலும் அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உண்மையான சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்படவில்லை என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.