நஜிப்பின் அரசியல் சீர்திருத்தங்கள் அவ்வளவுதானா?

“ஏமாற்றுவதும் பொய் வாக்குறுதிகளையும் வழங்குவதே அம்னோ ஆட்சியின் அடையாளங்கள் என்பது முன்னைக் காட்டிலும் இப்போது தெளிவாகி வருகிறது.”

அமைதியான கூட்ட மசோதா தெரு ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்கிறது

விஜய்47:  ஏமாற்றுவதும் பொய் வாக்குறுதிகளை வழங்குவதும் அம்னோ ஆட்சியின் அடையாளங்கள் என்பது முன்னைக் காட்டிலும் இப்போது தெளிவாகி வருகிறது.

அதில் உள்ள பிரதமர் முதல் கடைசி மனிதர் வரையில் விடுக்கும் ஒவ்வொரு அறிக்கையும் தங்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்றதே வேறு ஒன்றுமில்லை.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாட்டு நலன் குறித்தும் உலகில் தலை சிறந்த ஜனநாயகம் குறித்தும் அலங்காரமாக பேசுவதில் மிகவும் வல்லவராகத் திகழ்கிறார்.

அம்னோவை நாம் நன்கு அறிந்திருந்தும் “மகாதீர் காலத்திய” கொடுங்கோல் ஆட்சியைத் தொடர முடியாது என்பதை அம்னோ உணர்ந்து விட்டதாகவும் நல்ல நாட்கள் காத்திருக்கின்றன என்றும் நாம் நம்ப வைக்கப்பட்டோம்.

அண்மைய மசோதா இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. அதனால் அம்னோவை இனியும் நம்ப முடியாது. நியாயமற்ற வெறுப்பூட்டுகின்ற அம்னோ சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை.  அது எந்த சலுகையையும் கொடுக்கவில்லை.

சுஸாகேஸ்: அந்த மசோதாவை கூர்ந்து கவனித்தால் அது பெர்சே 3.0ஐ தடுக்க முயலுவது தெரியும். நஜிப் எந்த நேரத்திலும் பொதுத் தேர்தலை அறிவித்து, தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு பெர்சே 2.0 கோரிக்கைகள் மீது உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்காவிட்டால் என்ன நேரும் தெரியுமா? நீங்கள் ஊர்வலமாகச் செல்வதற்கு அமைச்சருடைய அனுமதிக்காக 30 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

போலேலாண்டில் ( Bolehland ) மக்களுக்குச் சேவை செய்வதைக் காட்டிலும் மாடுகளை எண்ணுவதில் மட்டுமே அக்கறை கொண்ட அமைச்சர்கள் இருக்கும் வரையில் பெர்சே 3.0க்கு எதிராக அம்னோ முடிந்த வரை தடுப்புப் போடுகிறது என நீங்கள் கடைசி டாலர் வரையில் பந்தயம் கட்டலாம். உள்துறை அமைச்சர் ‘வரையறுக்கும்’ பகுதிகள் என்றால் என்ன?  நமது வீடுகளுக்கு பின்புறமா? நீங்கள் எங்கு ஊர்வலமாக செல்ல முடியும் என்பதை ‘கிரிஸ் கத்தியை முத்தமிடும்’ ஹிஷாமுடின் ஹுசேன் சொல்ல வேண்டும் என உண்மையிலேயே எதிர்பார்க்கின்றீர்களா?

டூட்:”அமைதியான கூட்ட மசோதா” எல்லாம் வெற்று வேட்டு. அதன் உண்மை நிலையில் அதனை “ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் மசோதா” என அழைக்கலாமே?

ஜேஎஸ்டோம்: அல்லது அதற்கு அமைதி இல்லாத கூட்ட (அம்னோ உறுப்பினர்களைத் தவிர) மசோதா எனப் பெயரிடலாமே?

ஹெர்மிட்: எதிர்பார்க்கப்பட்டது போல அந்த உத்தேச அமைதியான கூட்ட மசோதா மீது நஜிப் அனைவரையும் ஏமாற்றி விட்டார்.

நாட்டை உலகில் தலை சிறந்த ஜனநாயகமாக மாற்றப் போவதாக அவர் முழங்கியது அவ்வளவு தானா? அவர் ஏற்கனவே பொருளாதாரத்தை “உருமாற்றம்” செய்து விட்டார். அடுத்தது கொடூரமான சட்டங்களை இன்னும் கொடூரமாக்கப் போகிறார்.

பென் காஸி: கட்டுப்பாடுகள் நிறைந்த சட்டமே அது. பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், அமைச்சர் ஹிஷாமுடின் போன்ற வழக்குரைஞர்களிடமிருந்து அந்த மசோதா வந்திருப்பதில் வியப்பில்லை.

ஒவ்வொரு கூட்டத்துக்கும் நாம் 30 நாள் முன்னறிவிப்புக் கொடுக்க வேண்டும். சாதக பாதங்கங்களை போலீஸ் ஆய்வு செய்ய அந்தக் கால அவகாசம் தேவையா?  பெரும்பாலும் போலீசார், கூட்டம் பிஎன்-னுக்குச் சாதகமாக இல்லை என்றால் அதனை முடியாது எனச் சொல்லி விடுவர்.

ஆனால் சட்டம் என்பது இரண்டு வழிகளிலும் தாக்கும். 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிஎன் எதிர்த்தரப்பில் (அவ்வாறு நம்புவோம்) அமர்ந்தால் அந்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்காக அது நிச்சயம் வருந்தும். ஏனெனில் அந்தச் சட்டம் அதன் கைகளையே கட்டி விடும். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னால் பார்க்கத் தவறிய அது தனது ‘முட்டாள்தனத்தினால்’ குட்டுப்படப் போகிறது.

TAGS: