பெர்க்காசா: ஒன்று கூடுவதற்கான கட்டுப்பாடுகள் சிறிய தியாகம்

பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்கின்றவர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், நாட்டின் பாதுகாப்புக்கும் பொது ஒழுங்கிற்கும் நாம் கொடுக்கும் சிறிய விலை என மலாய் உரிமைப் போராட்ட அமைப்பான பெர்க்காசா கூறுகிறது.

“ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என விடுக்கப்பட்டுள்ள நடப்புக் கோரிக்கைகளை தன்னால் முடிந்த வரை பூர்த்தி செய்ய அரசாங்கம் முயலுவதாகவே நான் கருதுகிறேன்”, என அதன் தலைவர் இப்ராஹிம் அலி சொன்னார்.

“பாதுகாப்பு என வரும் போது நாம் எதனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மற்ற நாடுகளில் பயங்கரவாத மருட்டல்கள் மிகவும் கடுமையாக இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். பல இனங்களையும் பல சமயங்களையும் கொண்ட நமது நாட்டில் அது இன்னும் முக்கியமானது. ஆகவே நாம் சிறிதளவு தியாகம் செய்ய வேண்டும். ஆனால் நாம் 98 விழுக்காடு நன்மை அடைகிறோம்.”

2011ம் ஆண்டுக்கான அமைதியான கூட்ட மசோதாவை நேற்று மக்களவையில் பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் தாக்கல் செய்தார். நாளை அதன் மீதான விவாதங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மசோதா, 1967ம் ஆண்டுக்கான போலீஸ் சட்டத்தில் பொதுக் கூட்டங்களுக்கு குறிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக அறிமுகம் செய்யப்படுகிறது.

பொதுக் கூட்டத்துக்கு அனுமதி தேவை என்பது உட்பட போலீஸ் சட்டத்தில் அதற்கு இணையாக உள்ள விதிமுறைகளை ரத்துச் செய்யும் திருத்தங்களும் அமைதியான கூட்ட மசோதாவுடன் சமர்பிக்கப்பட்டுள்ளன.

அந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்த இப்ராஹிம் கலவரத்தை மூட்டக்கூடிய கூட்டங்களை சமாளிப்பதற்கு அது உதவும் என்றார். ஏனெனில் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமையைத் தவறாகப் பயன்படுத்தும் “கறுப்பு ஆடுகளும்” இருப்பதாக அவர் சொன்னார்.

“இப்போது கூட அமைதியான கூட்டங்களுக்கு (ஏற்பாட்டாளர்களுக்கு) அனுமதி தேவை இல்லை. அவர்கள் தங்கள் விவரங்களை ஒரு பாரத்தில் பூர்த்தி செய்தால் போதும். அது போலீசார் அல்லது பாதுகாப்புப் பிரிவினர் ஏற்பாட்டாளர்களுக்கு உதவுவதற்காகும். எடுத்துக்காட்டுக்கு போக்குவரத்தை வழி நடத்துவதைக் கூறலாம்,” என அந்த பாசிர் மாஸ் எம்பி சொன்னார்.

பள்ளிவாசல்களில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் பெர்க்காசாவுக்கு அந்தக் கட்டுப்பாடுகள் சிரமத்தை ஏற்படுத்தாதா என அவரிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த இப்ராஹிம்,” ஆம். பிரச்னை இல்லை. நீங்கள் கூட்டம் நடத்த வேண்டுமானால் நாம் அதனை அரங்கத்தில் நடத்தலாம். நிறைய அரங்கங்கள் உள்ளன,” என்றார்.

‘இன்னும் 50 ஆண்டுகளுக்குக் காத்திருங்கள்..’

குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய சிறிய கூட்டங்களுக்குக் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“லண்டனில் நிகழ்ந்ததைப் போன்று. அது முதலில் சிறிய கூட்டமாக இருந்தது. ஆனால் என்ன நிகழ்ந்தது பார்த்தீர்களா ? யார் அதனைப் பயன்படுத்திக் கொண்டார்கள் ? கொள்ளையர்கள்.”

“இந்த நாட்டில் மில்லியன் கணக்கான குடியேற்றக்காரர்கள், அந்நியத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அஞ்சடியில் 10 பேர் கூடினால் கூட ஒருவர் கல்லை எறிய மாட்டார் என நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. நான் அந்த கலவரத்தை விரும்பவில்லை. இந்த நாடு அமைதியாக இருப்பதை உறுதி செய்ய நான் விரும்புகிறேன்.”

இன்னும் 50 ஆண்டுகளில் சமூகம் மேலும் முதிர்ச்சி அடைந்திருக்கும் போது அத்தகைய கட்டுப்பாடுகளை அகற்ற முடியும் என இப்ராஹிம் நம்புகிறார். ஆனால் இப்போதைக்கு தேசியப் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும்.

“நாடு குழப்பத்தில் மூழ்கியிருந்தால் மனித உரிமைகள், பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றால் என்ன நன்மை ? நாம் இந்த நாட்டில் அனுபவிப்பது மற்ற எந்த நாட்டையும் விட சிறந்தவையாகும்.”

“பொதுவாகச் சொன்னால் இது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை. 54 ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்தக் கட்டத்துக்கு வந்துள்ளோம். ஒரு வேளை அடுத்த 25 ஆண்டுகளில் மக்கள் கல்வி கற்றவர்களாக திகழலாம். அப்போது நாம் முழு சுதந்திரத்தை அனுபவிக்கலாம். ஆனால் இப்போதைக்கு குடிமக்களுக்கு கல்வி புகட்டுவதர்கு மலேசியாவுக்கு இன்னும் காலம் தேவைப்படுகிறது.”