இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசரமாக கூடியது. சிரியா மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தால் தோற்கடித்தது. இதேபோல், ரஷியா கொண்டுவந்த ஒரு தீர்மானமும் தோல்வியில் முடிந்தது.
சிரியா விவகாரத்தில் எதிர்காலத்தில் கையாள தீட்டிவரும் திட்டங்களை எல்லாம் அமெரிக்கா கைவிட வேண்டும் என ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் இந்த கூட்டத்தின்போது எச்சரித்தார்.
சிரியா நாட்டின் மீது அமெரிக்கா வீசும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் என லெபனான் நாட்டுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் ஜாசிப்கின் எச்சரித்துள்ளார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி முன்னர் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய அலெக்சாண்டர் ஜாசிப்கின், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த ஏவுகணைகளையும், அது எங்கிருந்து ஏவப்பட்டதோ, அந்த பகுதியையும் ரஷியா தாக்கி அழிக்கும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலடியாக, சிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று சவால் விட்டுள்ளார்.
இப்படி அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் மோதல் வலுத்துவரும் நிலையில் சிரியா வான் எல்லைக்குள் நுழையும் அமெரிக்க உளவு விமானங்களை ஸ்தம்பிக்க வைக்கும் கருவிகளை ரஷியா அமைத்துள்ளதாக ஐரோப்பிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, டவுமா நகரில் ரசாயன தாக்குதல் நடந்ததாக கூறப்படும் பகுதிகளையும், வேறு சில இடங்களையும் அமெரிக்க உளவு விமானங்கள் வேவு பார்க்காமல் இருப்பதற்காக இந்த ஆளில்லா விமானங்களை இயக்கும் ஜி.பி.எஸ். அலைக்கற்றை வீச்சு அப்பகுதிகளில் ஊடுருவ முடியாத வகையில் ‘ஜாம்மர்ஸ்’ என்னும் தடுப்பு கருவிகளை ரஷியா பொருத்தி இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைகோளில் இருந்து வெளியாகும் ஜி.பி.எஸ். அலைக்கற்றை வீச்சு தடைபட்டால் தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை பகுதியில் இருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப ஆளில்லா உளவு விமானங்கள் செயல்பட முடியாமல் போகும்.
மேலும், இப்படி கட்டுப்பாடுகளை இழந்து பறக்கும் உளவு விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகும் ஆபத்தும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு உக்ரைனில் இருந்து கிரிமியா பகுதியை பிரிக்க நடந்த போரில் பங்கேற்றிருந்த ரஷியா இதுபோன்ற தடுப்பு கருவிகளை பயன்படுத்தியதையும் அந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது.