வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்று கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் மீதான விசாரணைகள் தொடர்வதால் இன்றும் நீதிமன்றத்துக்கு அவர் செல்லவேண்டும்.
ஜெயலலிதா 1991-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தபோது 66 கோடி இந்திய ரூபாய்க்கும் மேல் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை முதலில் தமிழகத்தில் நடைபெற்றது. பிறகு திமுக பொதுச் செயலர் அன்பழகன் தொடுத்த மனுவையடுத்து இந்த வழக்கு விசாரணை பெங்களூருக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் குறுக்கு விசாரணைக்காக நீதிமன்றம் அனுப்பிய பல சம்மன்களை ஜெயலலிதா புறந்தள்ளிவந்தார். விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு அவர் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்த பிறகுதான் அவர் அக்டோபர் மாதம் 20 மற்றும் 21-ம் தேதியன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.