அமைதிப் பேரணி மசோதா, அம்னோ இனவாதத்தை அதிகரிக்கும்

அமைதிப் பேரணி மசோதா அம்னோவின் இனவாதத்தை மேலும் அதிகரிக்கும் தன்மை கொண்டது எனவே அதை கவனமாக பரிசீலிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தற்போது முதலாவது வாசிப்புக்கு, பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சர் நஸ்ரி அமைதிப் பேரணி மசோதா 2011-யை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மக்கள் அமைதியாக பேரணி ஊர்வலம் நடத்துவதை தடைசெய்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மக்களின் சனநாயக உரிமைகளுக்கு முன்னணி கொடுக்க, காவல்துறை சட்டம் 1967-இன் 27-வது பிரிவை அகற்றவுள்ளதாக அறிவித்தார். (இந்த பிரிவின் கீழ் பொதுமக்கள் ஒன்றுகூட வேண்டுமானால் காவல்துறையினரின் அனுமதியை பெற வேண்டும்; இல்லையேல் அதை தடை செய்யும் உரிமை காவல்துறையினருக்கு உள்ளது. அதை மீறி மூன்றுக்கும் அதிகமான நபர் கூடினால் குற்றமாகும்.

இந்த பிரிவு 27-ம் பிரிவு, மலேசிய அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானதாகும். அரசமைப்பு சட்டம்தான் மலேசியாவின் அனைத்து சட்டங்களுக்கும் மூலமானதாகும். அதற்கு முரணான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்ற இயலாது. எனவேதான், இண்ட்ராப், பெர்சே போன்ற அமைதிப் பேரணிகளை ஏற்பாடு செய்தவர்கள், அரசமைப்பு சட்டவிதி 10 (யுசவiஉடந 10) தங்களுக்கு கொடுத்துள்ள உரிமையை காவல்துறை சட்டவிதி 27-ஆல் பறிக்க இயலாது என வாதிட்டனர்.

தாக்கல் செய்யப்பட்ட மசோதா பற்றி கருத்துரைத்த சுவராம் மனித உரிமைக்கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கா.ஆறுமுகம், இது அடிப்படை சனநாயக உரிமைக்கு சாவுமணி அடிப்பதோடு, நாளடைவில் இது அம்னோவின் இனவாத ஆக்கிரமிப்பை ஆழப்படுத்தும் என்கிறார்.

“மக்களாட்சி என்பது சர்வதிகார ஆட்சியாக மாறாமல் இருக்கத்தான், மக்களுக்கு அமைதிப்பேரணி நடத்தவும் பேச்சு உரிமையும் இயங்கங்களை தோற்றுவிக்கவும் அரசமைப்பின் வழி உரிமைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை தடை செய்தால், மக்கள் எவ்வகையில் தங்களது உரிமைகளை தற்காப்பது? அப்படி செய்ய முற்படும் ஒவ்வொரு செயலும் குற்றமாக கருதப்படும்” என்கிறார் இவர்.

காவல்துறை, இராணுவம், நீதித்துறை இப்படி சட்ட அமுலாக்கத்துறை மற்றும் குற்றவியல் இலாக்கா அனைத்தும் ஓரினத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தருவாயில், இதுபோன்ற மக்களின் சனநாயக உரிமைகளை பறிக்கும் அரசமைப்புக்கு எதிரான சட்டங்கள் அளவுக்கதிகமான அதிகாரத்தை அம்னோவுக்கு வழங்கிவிடும். இது மற்ற இனங்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு இம்மாற்றங்கள் மிக மோசமான பாதிப்புகளை உண்டாக்கும் என எச்சரிக்கிறார் ஆறுமுகம்.

2007-ம் ஆண்டில் நடந்த இண்ட்ராப் பேரணிக்கு பிறகு நடந்த மார்ச்-8 தேர்தலில் மிகவும் மோசமாக அடிவாங்கிய தேசிய முன்னணி, மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஒரு நியாயமான நேர்மையான பொதுத்தேர்தலை நடத்தி அதன் முடிவுகளின் படி நடக்கவேண்டும். அதைவிடுத்து கடுமையான சட்டங்களை உருவாக்கி மக்களை கட்டுப்படுத்தி, பயமுறுத்தி பதவியேற்கக்கூடாது.

இந்தியர்களை பிரதிநிதிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு மிகவும் எச்சரிக்கையாக இந்த விவகாரத்தில் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது சார்பாக கருத்துரைத்த நாட்டின் மூத்த தொழில்சங்கவாதியும் அரசியல் கண்ணோட்டவருமான ஜீ.வி.காத்தையா, “இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், மலேசியாவின் வெகுசன மக்களின் உரிமைகளை காவல்துறையினரே நிர்ணயிப்பர்” என்கிறார்.

TAGS: