டிஏபி: இசி தேர்தல் தேதி குறித்து கூட்டரசு, மாநில அரசுகளுடன் விவாதிக்க வேண்டும்

எப்போது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை சுமூகமாக முடிவு செய்வதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் கூட்டரசு, மாநில அரசுகளை ஒன்றிணைக்க வேண்டும் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.

அது அவ்வாறு செய்யாவிட்டால் சிலாங்கூரிலும் பினாங்கிலும் மாநிலத் தேர்தல்களை நடத்துவது மீதான பக்காத்தான் ராக்யாட் திட்டங்களை இசி குறை கூறுவது இரட்டை வேடமாகக் கருதப்படும் என அவர் சொன்னார்.

“இசி கௌரவமான தரகராக இருக்க விரும்பினால் ஒரே மேசைக்கு வருமாறு கூட்டரசு மாநில அரசுகளை அழைக்க வேண்டும்,” என டிஏபி தலைமைச் செயலாளரும் பாகான் எம்பி-யுமான லிம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

பொதுத் தேர்தலை ஒரே சமயத்தில் நடத்துவது மீது பக்காத்தான் ராக்யாட் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களின் தலைவர்களைச் சந்திக்க விரும்புவதாக இசி தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் தெரிவித்துள்ளது பற்றி லிம் கருத்துரைத்தார்.

பிகேஆர், டிஏபி தலைமையில் இயங்கும் முறையே சிலாங்கூர் பினாங்கு அரசாங்கங்கள் நாடாளுமன்றத் தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்காக தங்கள் சட்டமன்றங்களைக் கலைக்கப் போவதில்லை என அறிவித்த பின்னர் அப்துல் அஜிஸின் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதால் கிடைக்கக் கூடிய நன்மைகளை விளக்க தாம் அவர்களைச் சந்திக்கப் போவதாக இசி தலைவர் கூறினார்.

“நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுவதற்குச் சட்டம் அனுமதித்த போதிலும் பணம், நேரம், ஆற்றல் ஆகியவற்றை மிச்சப்படுத்துவதற்கு ஒரே சமயத்தில் அவற்றை நடத்துவது நல்லது,” என அப்துல் அஜிஸ் குறிப்பிட்டார்.

கூட்டரசு அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் தேர்தலை நடத்துவதற்கான உரிமைக்கு அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ளதை லிம் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஏப்ரல் மாதம் தனது சட்டமன்றத் தேர்தல்களை நடத்திய சரவாக் மட்டும் தனித்து நடத்த முடியும் எனக் கேள்வி எழுப்பிய லிம் மற்ற மாநிலங்களும் ஏன் அவ்வாறு செய்யக் கூடாது என வினவினார்.

தேசியத் தேர்தல்கள் மீது பிஎன் கட்டுக்குள் உள்ள கூட்டரசு அரசாங்கம் எடுக்கும் முடிவு மீது இசி தலையிட்டதில்லை. அப்படி இருக்கும் போது அப்துல் அஜிஸின் கருத்துக்கள் ஏன் பக்காத்தானைக் குறிப்பாக குறி வைக்க வேண்டும்,” என்றும் அவர் வினவினார்.

“நீங்கள் கூட்டரசு அரசாங்கத்தின் தனியுரிமை பற்றி பேசும் போது மாநிலங்களின் தனி உரிமையையும் ஏன் மதிக்கக் கூடாது ? ” எனவும் லிம் வினவினார்.

என்றாலும் இசி சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புக்களும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யலாம். பொருத்தமான தேதியை ஒன்று கூடி விவாதிக்க பக்காத்தான் எப்போதும் தயாராக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

“நீங்கள் விவாதிக்கவில்லை என்றால் விளைவுகள் உங்களுக்கு ஒரு போதும் தெரியப் போவதில்லை,” என கூட்டம் நடத்தப்பட்டால் மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு பக்காத்தான் ஒப்புக் கொள்ளுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அந்த டிஏபி தலைமைச் செயலாளர் சொன்னார்.

“இசி பாகுபாடு காட்டவில்லை என்றால், ஒரு பக்கமாகச் சாயவில்லை என்றால் அது குறைந்த பட்சம் கூட்டம் நடத்துவற்கு முயற்சி செய்ய வேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.

TAGS: