கிம் ஜாங்-உன் மற்றும் முன் ஜே-இன் உடனான சந்திப்பு, வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையிலான மூன்றாம் சந்திப்பாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.
இந்த சந்திப்பு பல அசாதாரண தருணங்களை சந்தித்தது.
1) தென் கொரியாவில் சந்தித்தது ஏன்?
தனது தலைவர் கிம் ஜாங்-உன், தென் கொரியாவுக்கு சென்று முன் ஜே-இன்னை சந்திக்க வட கொரியா ஒப்புக்கொண்டது.
2000-ம் ஆண்டு வட கொரியாவில் நடந்த முதல் கொரிய உச்சி மாநாட்டில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-இல்-லை பார்த்து மறைந்த தென் கொரிய அதிபர் கிம் டே-ஜங் சொன்னது இப்போது நடந்துள்ளது.
அப்போதைய வட கொரிய தலைவர் கிம் ஜாங்-இல்லை விட, கிம் டே-ஜங் 17 வயது மூத்தவர். மூத்தவரை இளையவர் வந்து பார்ப்பதுதான் பொறுப்பு, எனவே கிம் ஜாங்-இல் தென் கொரியா வர வேண்டும் என கிம் டே-ஜங் கூறினார். ஆனால், அது நடைபெறவே இல்லை.
எனவே 1951 முதல் தென் கொரியாவுக்கு வரும் முதல் வட கொரிய தலைவரான கிம், முன் மீது மிகுந்த மரியாதை காட்டினார்.
ராணுவமயமற்ற எல்லை பகுதியில், கிம்மை வரவேற்ற முன், தான் எப்போது வட கொரியா வரலாம் என கேட்டார். பிறகு திடீரென ஒரு சம்பவம் நடந்தது.
தென் கொரிய அதிபர் முன்னின் கையை பிடித்து, தன் நாட்டு எல்லை பக்கம் அழைத்துச் சென்ற கிம்,”இப்பொழுது எப்படி இருக்கிறது?” என கேட்டார்.
இந்த சந்திப்பு முழுவதும் தென் கொரிய அதிபர் முன் மீது மிகுந்த மரியாதை காட்டினார் கிம். இது கொரிய தீபகற்பத்தில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என கிம்மின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
2) காரை சுற்றி ஓடிவந்த பாதுகாவலர்கள்
வடகொரியாவின் மிக உயர்ந்த தலைவராக இருப்பதில் பல வசதிகள் உள்ளன – ஒரு பெரிய பாதுகாப்பு பரிவாரம் உட்பட.
கிம்மின் பாதுகாப்பு படையினர், சந்திப்பு நடக்கும் எல்லா அறைகளுக்கும் சென்று முழு சோதனை நடத்தினர்.
கிம் அமர்ந்த நாற்காலியையும், அவர் உபயோகப்படுத்திய பகுதிகளையும் தூய்மைப்படுத்தும் மருந்து மூலம் கிம்மின் பாதுகாப்பு படையினர் சுத்தப்படுத்தினர்.
100 நிமிட பேச்சுவார்த்தைக்கு பிறகு கிம் மதிய உணவுக்குச் சென்றபோது, அவரது பென்ஸ் காரை சுற்றி ஒரு டஜன் பாதுகாவலர்கள் ஓடிவந்தனர். தனது படை பலத்தை வெளிப்படுத்தும் எதிர்பாராத செயலாக இது இருந்தது.
3) ஓர் அரிய கோரிக்கை
யிவோன்பியோங் தீவில் வாழும் இடம்பெயந்த மக்களும், வட கொரியாவில் இருந்து தப்பித்து சென்றவர்களும் தங்களது சந்திப்பு குறித்து அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர் என தென் கொரிய அதிபரிடம் வட கொரிய அதிபர் கிம் கூறினார்.
வட கொரியாவில் இருந்து தப்பித்து சென்றவர்களுக்கு ஆதரவாக கிம் பேசுவது அரிதானது. வட கொரியா, தனது நாட்டில் இருந்து தப்பித்து சென்றவர்களை துரோகிகளாகக் கருதுகிறது. இதற்காகத் தப்பித்து சென்றவர்களின் குடும்பங்கள் தண்டிக்கப்படலாம்.
வட கொரியாவின் முக்கிய உள்கட்டமைப்பு முன்னேற்றம் தேவை என்று கிம் ஒப்புக் கொண்டது மிகவும் சுவாரசியமானது.
கொரிய மக்களால் புனிதமானதாக கருதப்படும் வட கொரியாவில் உள்ள பெய்டு மலையில் ஏற தான் விரும்புவதாக கிம்மிடம் முன் கூறினார்.
”அங்குள்ள மோசமான போக்குவரத்து உள்கட்டமைப்பு எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது” என கிம் கூறினார்.
4) இரு பெண்கள்
முன் மற்றும் கிம் இடையிலான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை கிம்மின் சகோதரி கிம் யோ-ஜாங் மற்றும் முன்னாள் ராணுவ புலனாய்வு அதிகாரியும், கொரிய உறவுகளின் முக்கிய கொள்கை வகுப்பாளருமான கிம் யோங்-சோல் மூலமே நடந்தது.
கிம்மின் மிக நெருக்கமான ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களான இவர்கள் இருவரும் ஒலிம்பிக்கின் போது தென் கொரியாவுக்கு பயணம் செய்தனர்.
பேச்சுவார்த்தையின் போது கிம் பேச வேண்டிய ஆவணங்களை, சந்திப்புக்கு முன்பு கிம் யோ-ஜாங் கொண்டுவந்தார்.
இவர்களுடன் பல மூத்த அதிகாரிகளையும் கிம் அழைத்துச் சென்றார்.
5)அர்த்தம் மிகுந்த சல்யூட்
வட கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பாக் யாங்க்-சிக் மற்றும் வட கொரிய ராணுவத்தின் தலைவரான வைஸ் மார்ஷல் ரி மியோங்-சூ ஆகியோர் மரியாதை நல்லெண்ணமாகத் தென் கொரிய அதிபர் முனுக்கு சல்யூட் வைத்தனர்.
ஆனால், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சரும், ராணுவ தலைவரும் கிம்மிற்கு சல்யூட் வைக்கவில்லை.
தனது பங்காக, தென் கொரியா ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்ட போது கிம் சல்யூட் வைக்கவில்லை.
இரு தலைவர்களும் “ஒரு புதிய சமாதானத்தை” ஆரம்பிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் கடுமையான பல சவால்கள் அவர்கள் முன் காத்திருக்கின்றன. -BBC_Tamil