வடகொரியா- தென் கொரியா பேச்சுவார்த்தைகளுக்கு தென் கொரியாவின் முயற்சிகளே பிரதானமானதாக இருக்கும் நிலையில் அதற்கான பாராட்டு டிரம்புக்கு செல்வது ஏன்?
1953இல் கொரிய போர் நிறுத்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு தற்போது வடகொரிய-தென் கொரிய தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது இது மூன்றாவது முறையாகும். இதன் பிறகு மே அல்லது ஜூன் மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் இடையே சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இரு நாடுகளிலும் பதவியில் இருக்கும் தலைவர்கள் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான பகையுணர்வு மட்டுப்படுவதுதோடு, 68 ஆண்டு காலமாக இரு கொரிய நாடுகளுக்கும் இடையிலான மனவேறுபாடுகளை மாற்றும் வகையிலான ஒரு சமாதான உடன்படிக்கையும் ஏற்படலாம்.
2018 ஜனவரி நான்காம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் செய்தி இது: “நிபுணர்கள் அனைவரும் அவர்களை எடை போடுவதில் தோல்வியுற்ற நிலையில், நான் உறுதியாகவும், வலிமையாகவும், வடகொரியாவுக்கு எதிராக நமது மொத்த வல்லமையையும் காட்ட தயாராக இல்லை என்றால் வட கொரியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையில் பேச்சுவார்த்தையும் உரையாடலும் நடைபெறும் என்பதை யாராலும் நினைத்துப்பார்க்க முடியுமா? முட்டாள்கள், ஆனால் பேச்சுவார்த்தை ஒரு நல்ல விஷயம்!”
“இது அமெரிக்கா முன்னெடுத்த பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தத்தின் விளைவால் ஏற்பட்ட தாக்கமாக இருக்கலாம்” என்று கூறிய தென் கொரிய அதிபர் முன் ஜே-இன், வட கொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு காரணமான அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்தார்.
அமெரிக்கா முன்னெடுத்த தடைகளை செயல்படுத்தியது ஐ.நா
வட கொரியா 2006இல் தனது முதல் அணு ஆயுத பரிசோதனை நடத்தியதில் இருந்து, அமெரிக்காவும், அதன் பல நட்பு நாடுகளும் வட கொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதேபோல், ஐ.நா. பாதுகாப்பு சபை வட கொரியா மீது ஒன்பது முறை தடைகளை நிறைவேற்றியது, அவற்றில் பல அமெரிக்காவால் முன்மொழியப்பட்டவை.
காலப்போக்கில், இந்த தடைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டு தொடக்கத்தில் கனரக ஆயுதங்கள், ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் நவீன பொருட்கள் வழங்குவதை ஐ.நா. தடை செய்தது. 2017, டிசம்பர் மாதத்தில், எண்ணெய் இறக்குமதி, உலோகம், வேளாண்மை ஆகிய துறைகளுக்கும் தடைகளை விரிவுபடுத்திய ஐ.நா, வெளிநாடுகளில் பணிபுரியும் வட கொரியர்களை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பவேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இந்த சமீபத்திய தடைகள் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா முன்னெடுத்தவை என்றாலும், இந்த ஐ.நா.பொருளாதார தடைகளை சீனா அண்மையில் செயல்படுத்தியது வட கொரியாவை கடுமையாக பாதித்தது.
வட கொரியா தனது வெளிநாட்டு வர்த்தகத்தில் 90%க்கும் அதிகமானவற்றை சீனாவுடன் மேற்கொண்டுள்ள நிலையில், தனது நீண்டகால கூட்டாளியான வடகொரியாவுக்கு எதிரான ஐ.நா. பொருளாதாரத் தடைகளுக்கு சீனா ஆதரவாக வாக்களித்தது.
ஐ.நா. பொருளாதாரத் தடைகளை அரிதாகவே சீனா ஆதரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தனது ராணுவ திறன்களை நிரூபித்த பின்னர், கிம் ஜாங்-உன் பொருளாதார வளர்ச்சியின் பக்கம் தனது கவனத்தை திருப்புகிறார் என்று சாத்தமின் ஹவுஸின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜான் நில்சன்-ரைட் கூறுகிறார். தடைகள் எதுவும் கிம்மின் ஆயுத அபிவிருத்தி திட்டங்களை தடுத்து நிறுத்தாத நிலையில், தற்போதைய முயற்சி, கிம்மின் நீண்ட கால பொருளாதாரத் திட்டங்களுக்கு தடை ஏற்படுத்தக்கூடும்.
கடுமையான பேச்சுவார்த்தைகள் மற்றும் ராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல்கள்
2018 ஜனவரி இரண்டாம் தேதியன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் செய்தியில் இவ்வாறு கூறினார்: “வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், தனது மேசை மீது அணுசக்தி பொத்தானை எப்போதும் வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். அவருடையதைவிட மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த பொத்தான் என்னிடமும் இருக்கிறது, அது வேலையும் செய்யும் என்பதை வீழ்ச்சியடைந்த மற்றும் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட அவரது பிராந்தியத்தை சேர்ந்த யாராவது அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்”.
2017 செப்டம்பர் 23 அன்று டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் செய்தி இது: “வட கொரிய வெளியுறவு அமைச்சர் ஐ.நாவில் பேசியதை இப்போதுதான் கேட்டேன். சிறிய ராக்கெட் மனிதனின் எண்ணங்களை அவர் எதிரொலித்திருந்தால், அவர்கள் நீண்ட காலம் இருக்க மாட்டார்கள்.”
அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவும் 2014இல் வட கொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்தார், “இந்த விஷயங்களை மற்றவர்களின் மீது சுமத்த நாங்கள் ராணுவ வலிமையை பயன்படுத்தவில்லை, ஆனால் கூட்டாளிகளையும் எங்கள் வாழ்க்கையையும் பாதுகாக்க ராணுவ வலிமையைப் பயன்படுத்தத் தயங்க மாட்டோம்.”
2016இல், CBS செய்தி ஊடகத்தில் பேசிய அதிபர் ஒபாமா, “வட கொரியா “பொறுப்பற்றவர்கள்” என்றும், “அவர்களுடன் நெருக்கமாக நாங்கள் விரும்பாத அளவுக்கு பொறுப்பற்றவர்கள்” என்றும் கூறினார்.
“வட கொரியாவை நமது ஆயுதங்களைக் கொண்டு அழிக்க முடியும், ஆனால் அத்துடன் மனிதாபிமான பாதிப்புகள் ஏற்படும் என்பதும், நம்முடைய முக்கிய நட்பு நாடான கொரியா குடியரசின் அண்டை நாடாக அது இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ், வட கொரியாவை “தீய சக்தியின் மையம்” (axis of evil) என்ற முத்திரையிட்டார். “axis of evil” என்ற சொற்றொடரை 2002 ஜனவரி 29 அன்று முதன்முறையாக பயன்படுத்தினார் புஷ். பயங்கரவாதத்தை ஊக்குவித்து, பேரழிவு ஆயுதங்களை உருவாக்கும் நாடுகளை விமர்சிக்க இந்த சொற்றொடரை அவர் அடிக்கடி பயன்படுத்தினார்.
அதன்பிறகு அமெரிக்கா ராணுவ வலிமை கொண்டு அச்சுறுத்தல்கள் வெளியிட தொடர்ந்து பல ஆண்டுகள் இந்த சொற்றொடரை பயன்படுத்தியது.
தென் கொரியாவின் ஏற்பாடு
தென்கொரியாவில் முன் ஜே-இன்னுக்கு முந்தைய இரண்டு அதிபர்களும், வட கொரியாவிற்கு எதிரான கடுமையான அணுகுமுறையை மேற்கொண்டிருந்தனர். லீ மியுங்-பாக் (2008-2013) கடுமையான அணுகுமுறையை கொண்டிருந்தாலும், அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த பார்க் ஹியூன்-ஹை (2013-2017), வட கொரியாவுடன் ஒரு சமாதான ஏற்பாட்டை முன்னெடுத்தார். ஆனால், அது ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டதை அடுத்து 2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.
தனது தொடக்க உரையில் தென்கொரிய அதிபர் முன் ஜே-இன் இவ்வாறு குறிப்பிட்டார், “கொரிய தீபகற்பத்தில் சமாதானத்தை ஏற்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்”.
முன் ஜே-இன்னைத்தவிர இதுவரை வட கொரிய உயர் தலைவரை சந்தித்த தென் கொரிய அதிபர்கள் கிம் டே-ஜங் (1999-2003) மற்றும் ரோ மூ-ஹுன் (2003-2008) இருவரே. 2000 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற, இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடுகளில் வட கொரிய தலைவர்களை இவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகளுக்காக கிம் டே-ஜங் நோபல் சமாதான பரிசை பெற்றார்.
“தென் கொரியர்களுக்கே அதிக பாராட்டு சென்று சேரவேண்டும். ஏனெனில், வட கொரியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதை உறுதி செய்ததும், அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக ஏற்பாடு செய்ததும் தென் கொரியாதான்” என்று சொல்கிறார் ஆஸ்டன் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் விர்ஜினி க்ரெல்க்ஸ்கிக்.
ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கான பெருமையை டிரம்புக்கு தென்கொரியா கொடுப்பது ஏன்?
தென்கொரியா சமயோஜிதமான புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்வதாக கூறுகிறார் க்ளெல்ஸ்கைக். அமெரிக்காவை சமாதான பேச்சுவார்த்தையுடன் காரணமாக கூறுவதற்கு காரணம் என்ன தெரியுமா?
“இரு கொரிய நாடுகளும் கொரியாக்களும் ஏதாவது ஒரு விஷயத்தில் அமெரிக்க கொள்கையால் குழப்பம் மற்றும் கவலை கொண்டிருக்கின்றன”. -BBC_Tamil