ஈராக்கில் தேர்தல் அதிகாரிகளை சுட்டுக்கொல்லும் வீடியோவை வெளியிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள்..

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள், ஈராக் படையினருக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம், ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து வந்த ஈராக் நகரங்கள் அத்தனையும் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அந்த நாட்டின் பிரதமர் ஹைதர் அல்அபாதி தெரிவித்தார்.

ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளை இன்னும் முற்றிலுமாக ஒடுக்க முடியவில்லை. இந்த நிலையில், ஈராக்கில் வருகிற மே 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி  ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்ட எச்சரிக்கை  செய்தியில் ஈராக் தேர்தலை நடத்துபவர்கள் மற்றும் வாக்களிப்பவர்கள் குறிவைக்கப்படுவார்கள், மேலும் வாக்குச்சாவடிகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என கூறியிருந்தனர்.

இதையடுத்து வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என ஈராக் அரசு அறிவித்தது. இந்நிலையில், ஈராக் நாட்டின் அல்-தார்மியா பகுதியை சேர்ந்த இரு தேர்தல் அதிகாரிகளை சுட்டுகொல்லும் வீடியோவை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.