தென் கொரியா அதிபர் முன் ஜே-இன் மற்றும் வட கொரியா தலைவர் கிம் ஜாங்-உன் சந்திப்பானது ஒரு வரலாற்று திருப்புமுனையை பிரதிபலிக்கிறது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தமான – கொரிய தீபகற்பத்தின் சமாதானம், செழிப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான புதிய பன்முன்ஜொம் பிரகடனம், நீண்ட கால அமைதிக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
வட கொரிய தலைவர், தென் கொரிய மண்ணில் அடி எடுத்து வைத்ததன் தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது.
விரோத நாடு என்று கருதப்பட்ட எல்லைக்குள் உறுதியுடன் சென்றது இளம் சர்வாதிகாரியான கிம்மின் தைரியத்தை காண்பிக்கிறது.
தென் கொரியாவில் காலடி எடுத்து வைத்தவுடன், வட கொரியாவுக்கு முன் ஜே-இன்னை அழைத்தது கிம் தன்னிச்சையாக எடுத்த புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும்.
வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையே உள்ள எல்லைகளை மறைத்து, சோலும் ப்யாங்யாங்கும் ஒருமைப்படுவதே குறிக்கோள் என்பது போல தோன்றுகிறது.
அந்நாளில் நடைபெற்ற மற்ற விஷயங்கள் எல்லாம் புத்திசாலித்தனமாக இயக்கப்பட்டது. இருநாட்டு தலைவர்களும் திறந்த வெளியில் நெருக்கமாக பேசியது சக்திவாய்ந்த புதிய கதைகளை முன்னெடுத்து சென்றது.
கைக்குலுக்கள்கள், பரந்த புன்னகை, ஒருவருக்கு ஒருவர் அணைத்து கொண்டது என கொரியர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்வதற்கான செய்தியை இது வழங்கியுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் முன்பு இரு நாட்டு தலைவர்களின் கூட்டு அறிக்கை வெளியிட்டது, கிம்மிற்கு சரியான நேரத்தில் நடைபெற்ற சாதகமான நிகழ்வாகும்.
உதாரணமாக, கிம் உறுதியாக மற்றும் நிதானமாக செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிட்டது, கடுமையான சர்வாதிகார தலைவர் என்ற பிம்பத்தை மாற்றி, சமாதானத்திற்காகவும், தேசிய நல்லிணக்கத்திற்காகவும் இயங்கும் சாதாரண அரசியலாளர் போல அவரை சித்தரித்தது.
இந்த கூட்டு அறிக்கை கடந்த 2000 மற்றும் 2007-ல் ஏற்பட்ட கொரிய தலைவர்களின் சந்திப்பின் போது ஏற்பட்ட உடன்படிக்கையின் கருப்பொருளை எதிரொலிக்கிறது.
இரு நாடுகள் இடையிலான தொடர்பு, ராணுவ பேச்சுவார்த்தைகள் , பொருளாதார ஒத்துழைப்பு, மற்றும் இரு நாடுகளின் குடிமக்கள் இடையே தொடர்புகளை விரிவாக்குவது ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் முந்தைய ஒப்பந்தங்களில் இடம்பெற்றன.
எனினும், தற்போதைய சந்திப்பின் போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. “நிலம், கடல் மற்றும் வான் உட்பட ஒவ்வொரு களத்தில் ஒருவருக்கொருவர் விரோதமான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மே 1-ம் தேதி முதல் இரு நாட்டு எல்லையில் உள்ள ராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்திற்கு அருகில் “அனைத்து விரோத நடவடிக்கைகளையும்” நிறுத்துதல்,மே மாதம் இருதரப்பு ராணுவ பேச்சுவார்த்தைகளை தொடங்குவது, 2018 ஆசிய விளையாட்டுகளில் இரண்டு கொரிய நாடுகளும் கூட்டாக பங்கேற்பு, மிக முக்கியமாக இந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் தென் கொரிய அதிபர் முன், வட கொரியாவுக்கு வருகை தருவது என பல விஷயங்கள் கூட்டு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
உச்சிமாநாட்டில் கிம்மின் பேச்சுக்கள், அடையாள அரசியலுக்கு ஆதரவானதாக இருந்தது. ”ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு ரத்தம்”, என குறிப்பிட்ட அவர், கொரியர்களுக்கு இடையே எதிர்காலத்தில் மோதல்கள் வராது என அழுத்தமாக குறிப்பிட்டார். இவை தென் கொரிய மக்களிடையே நன்றாக எடுபட்டது.
பொதுவான எதிர்காலத்தை நிர்ணயிக்க அனைத்து அழுத்தங்களுக்கும் கொரியர்கள் மத்தியில் உள்ளதே இதற்கு காரணம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப்- கிம் இடையிலான சந்திப்பு மே அல்லது ஜூன் மாதம் நடக்க உள்ளது. அப்போது, சமாதானத்தை தீர்வாக முன்வைக்கும் வட கொரியாவின் உறுதியை சோதிப்பது மிகவும் முக்கியமானது.
டிரம்ப்- கிம் சந்திப்பு மட்டும், அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான இடைவெளியை குறைக்காது. வட கொரியா உடனான இடைவெளியை குறைப்பதற்கு அமெரிக்கா எப்படி தனது யுக்திகளை வளர்த்துக்கொண்டுள்ளது என்பதும் முக்கியம்.
கொரிய உறவுகளில் சுமூகத்தை ஏற்படுத்தியதில் அனைத்து புகழம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் செல்லும் விதமாக, தென் கொரிய அதிபர் முன் தெளிவாக செயல்பட்டார். போரின் அபாயத்தை குறைப்பதற்கும், வட கொரியா உடனான பேச்சுவார்த்தையில் டிரம்ப் ஈடுபாட்டுடன் பங்குபெறுவதற்கு இதுவே சிறந்த வழி.
வெள்ளிக்கிழமையின் வியத்தகு நிகழ்வுகள், வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஆளுமை மற்றும் தலைமைத்துவம் மிக முக்கியம் என நினைவுப்படுத்துகிறது. இரு கொரிய தலைவர்களின் சந்திப்பு, அவர்களின் ராஜதந்திரத்தையும் எதிர்கால பார்வையையும் எதிரொலிக்கிறது. -BBC_Tamil