ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டம் – அம்பலப்படுத்திய இஸ்ரேல்..

மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா சபையில் புகார் கூறிய அமெரிக்கா, ஒபாமா ஆட்சிக்காலத்தின் போது ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கச் செய்தது.

ஆனால், ஈரான், தங்களிடம் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இருந்தபோதிலும், அணு ஆயுதங்கள் எதையும் தயாரிக்கவில்லை என்றது.

இருப்பினும், உலக நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டைன், சீனா, பிரான்ஸ், ரஷியா, ஜெர்மனி) விதித்த பொருளாதார தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அணு ஆயுதப் பரவல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக, ஈரான் அறிவித்தது. இதையடுத்து, ஈரானுக்கும், வளர்ச்சி அடைந்த ஆறு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் 14-7-2015 அன்று அணு ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஈரானில் யுரேனியத்தை செறியூட்டி, அணு குண்டாக மாற்ற பயன்படும் ‘சென்ட்ரிபியூஸ்’ எண்ணிக்கை மூன்றில் இரு பங்குக்கும் கீழாக குறைக்கப்படும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3.67 சதவீதத்துக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்துக்கு முன்னதாக ஈரானில் சேமித்து வைக்கப்பட்டுள்ள யுரேனியத்தை கப்பலில் ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நிபந்தனைக்கும் ஈரான் சம்மதித்தது. அதன்படி, அதிகப்படியான இருப்பில் இருந்த யுரேனியம் கப்பல்களில் ஏற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் இறுதிக்கட்டமாக 20 சதவீதம் செறிவூட்டப்பட்ட 11 ஆயிரம் கிலோ யுரேனியத்தை ஈரான் அரசு கடந்த 29-12-2015 அன்று கப்பலில் ஏற்றி ரஷியாவுக்கு அனுப்பி வைத்தது, இதன்மூலம், 300 கிலோவுக்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பாக வைத்து கொள்வதில்லை என்ற ஒப்பந்தத்துக்கு ஈரான் அரசு மதிப்பளித்ததாக முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கு பின்னரும் ஈரான் அரசு ரகசியமாக அணு ஆயுதங்களையும், அணு குண்டுகளையும் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு ஆதாரமாக ஈரான் அணு ஆயுத திட்டம் தொடர்பான சுமார் 500 கிலோ எடையிலான ரகசிய கோப்புகளின் 55 ஆயிரம் பக்கங்கள் மற்றும் 138 சி.டி.க்களை நேற்று செய்தியாளர்கள் முன்னிலையில் பெஞ்சமின் நேதன்யாகு காட்சிப்படுத்தி, பேட்டியளித்தார்.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்துக்கு ஈரான் மதிப்பளிக்காவிட்டால் இந்த ஒப்பந்தத்தை விட்டு நாங்கள் விலகி விடுவோம். இதற்கு இனியும் நாங்கள் மதிப்பளிக்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டி வருகிறார். இதுதொடர்பாக, மே 12-ம் தேதிக்குள் முடிவெடுக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையினரால் கைப்பற்றப்பட்ட ரகசிய அணு ஆயுத திட்டத்தின் கோப்புகள் அனைத்தும் போலி தகவல் என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தூண்டி விடுவதற்காக நேதன்யாகு கதைகட்டி வருவதாக ஈரான் ஊடகங்கள் கூறி வருகின்றன.

எனினும், வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை பற்றி தான் அடிக்கடி தெரிவித்து வந்த கருத்து நூறு சதவீதம் உண்மையானது என்பதை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியதற்காக இஸ்ரேல் பிரதமரை பாராட்டியுள்ளார்.

-athirvu.com