வட, தென்கொரியா இடையேயான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர உதவுவோம் – சீனா..

அடுத்தடுத்த அணு ஆயுத சோதனைகள் மூலம் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா அணு ஆயுத சோதனையை கைவிடுவதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அறிவித்தார். இதையடுத்து 65 ஆண்டுகளாக நிலவிய பகையை மறந்து வடகொரிய, தென்கொரிய அதிபர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வருவதுடன், தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்கா உறுதியளித்தால் அணு ஆயுதங்களை கைவிடவும், அணு ஆயுத சோதனை கூடங்களை மூடவும் தயாராக உள்ளதாக கிம் கூறியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், வடகொரிய வெளியுறவு மந்திரி ரி யோங் ஹோ விடுத்த அழைப்பை ஏற்று, சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்க் யி, இன்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து வாங் யி கூறுகையில், வடகொரியா மற்றும் தென் கொரியா இடையேயான போரை நிறுத்த சீனா உதவும் என்றும், வட கொரியாவின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயங்களை முன்னேற்ற சீனா உதவும் என்று தெரிவித்தார்.