இஸ்‌ரேலின் முயற்சி தோல்வி?

ஈரானின் அணுவாயுதத் திட்டங்கள் எனக் கூறப்படும் புலனாய்வுத் தகவல்களை வெளியிடுவதாகத் தெரிவித்து, இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேற்கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி, போதியளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கருதப்படுகிறது. அவரது பிரதான இலக்காக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கவனத்தைப் பெறுவதே காணப்பட்ட போதிலும், ஐரோப்பிய நாடுகளின் பதில், எதிர்பார்த்தளவில் காணப்படவில்லை என்றே கருதப்படுகிறது.

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுவாயுத ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்து எதிர்த்துவரும் இஸ்‌ரேல், அது தொடர்பான முடிவை விரைவில் எடுக்கவுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அவ்வொப்பந்தத்திலிருந்து விலக வேண்டுமென எதிர்பார்க்கிறது.

இந்நிலையில், அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கான திட்டங்களை, ஈரான் கொண்டிருந்தது எனத் தெரிவித்து, இஸ்‌ரேலியப் பிரதமர் நெதன்யாகு, சர்வதேச நாடுகளுக்கு உரையாற்றியிருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது கருத்துத் தெரிவித்துள்ள, ஐக்கிய நாடுகளின் அணுவாயுதக் கண்காணிப்பு அமைப்பு, புதிய தகவல்கள் கிடைத்தால், அவை குறித்து ஆராயவுள்ளதாகத் தெரிவித்த போதிலும், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், அணுவாயுதத் திட்டமொன்றை ஈரான் கொண்டு நடத்தியது என்பதற்கான ஆதாரத்தைத் தாங்கள் கண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டுச் செயலாளர், “அணுவாயுதத் தொழில்நுட்பம் தொடர்பான ஈரானின் பழைய திட்டங்கள் தொடர்பான, இஸ்‌ரேலியப் பிரதமரின் அளிக்கை, ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தைத் தொடர்ந்தும் கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.

அத்தோடு, ஈரான் அணுவாயுத ஒப்பந்தம் நடைமுறையிலிருப்பது, ஈரான் மீதான நம்பிக்கையால் இல்லை எனவும், ஐக்கிய நாடுகளின் அணுவாயுதக் கண்காணிப்பு அமைப்பின் சோதனைகளின் வடிவிலேயே என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துத் தெரிவித்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திரப் பிரதானி ஃபெடெரிக்கா மொகெரினி, அணுவாயுத ஒப்பந்தத்தை ஈரான் மீறுகிறது அல்லது அதன்படி நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை, இஸ்‌ரேலியப் பிரதமரின் அளிக்கையில் கண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார். அதேபோல், ஈரான் அணுவாயுத ஒப்பந்தமென்பது, நம்பிக்கையின் அடிப்படையிலான ஒன்று அல்லவெனவும், நம்பிக்கை இருந்திருந்தால், ஒப்பந்தமே தேவைப்பட்டிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

-tamilmirror.lk