தென் கொரியாவிற்கு நிகராக தன் நேர மண்டலத்தை மாற்றிய வட கொரியா

கடந்த வாரம் நடைபெற்ற உச்சி மாநாட்டைத் தொடர்ந்து தென் கொரியவின் நேரத்திற்கு நிகராக, வட கொரியா தனது நேர மண்டலத்தை மாற்றி அமைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று உள்ளூர் நேரம் 23:30 படி, வட கொரியாவின் கடிகாரங்கள் அனைத்தும் 30 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டன.

கொரிய ஒற்றுமையை மீட்டெடுக்க “முதல் அடி இது” என்று அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே சி என் ஏ தெரிவித்துள்ளது

இந்நிலையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை சந்திக்க தாம் ஒரு தேதி வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்ப்

“சந்திப்பு நடைபெற உள்ள தேதி மற்றும் இடம் தயாராக உள்ளது. விரைவில் அறிவிக்கப்படும்” என்று வெள்ளை மாளிகை முன்பு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் தெரிவித்தார். இந்ந சந்திப்பின் இறுதியில் நல்ல விடயங்கள் பல நடக்கும் என்று தாம் எதிர்பார்பதாகவும் அவர் கூறினார்.

வட கொரியாவின் நேர மண்டலம் என்ன?

தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை விட வட கொரியா அரை மணி நேரம் பின்நோக்கி இருந்தது.

கொரியா தீபகற்பம் ஜப்பான் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது அவை ஒரே நேர மண்டலத்தை கொண்டிருந்தன.

“கொடிய ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு” எதிரான ஒரு நிலைப்பாட்டை காண்பிக்க 2015ஆம் ஆண்டில் கூடுதல் அரை மணி நேரத்தை வட கொரியா அறிமுகப்படுத்தியது.

முன்னதாக, ஜப்பானிய நேரத்தில் இருந்து 1950களில் விலகிய தென் கொரியா மீண்டும் 1960களில் பழைய நேரத்திற்கு மாறியது.

மண்டலத்தை மாற்றிய வட கொரியா

ராணுவமயமற்ற மண்டலத்தில் உள்ள பன்முன்ஜமில், அதாவது இரு கொரியாக்களை இணைக்கும் எல்லையில் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கடிகாரங்கள் இரு வேறு நேரங்களை காண்பிக்கும்.

அப்பகுதியில்தான் வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டனர்.

பேச்சுவார்த்தை முடிந்தவுடன், இரண்டு கடிகாரங்களையும் பார்த்து வட கொரிய தலைவர் கிம், சோகமடைந்ததாக தென் கொரிய அதிபர் தரப்பில் ட்வீட் செய்யப்பட்டது.

இப்படியான அசாதாரண நேர மண்டலங்கள் எங்கெல்லாம் உள்ளது?

மண்டலத்தை மாற்றிய வட கொரியா

பாகிஸ்தானின் நேரத்தைவிட, அரை மணி நேரம் முன்னோக்கி இருக்கும் இந்தியா, நேபாளின் நேரத்தை விட 15 நிமிடங்கள் குறைவாக இருக்கும்.

மற்ற அட்லான்டிக் மாகாணங்களை விட கனடாவின் நியூ ஃபவுன்ட்லேன்ட் மாகாணம் அதிகாரப்பூர்வமாக அரை மணி நேரம் தள்ளியிருக்கும்.

மேற்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா எல்லையில் 90 நிமிடங்கள் நேர வேறுபாடு இருக்கும். -BBC_Tamil