வடகொரியா அமைதி பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்ததற்கு, அமெரிக்க நெருக்கடி காரணம் அல்ல, அவ்வாறு அந்த நாடு நினைத்தால் மீண்டும் பழைய நிலையை எடுக்க தயங்க மாட்டோம் என வடகொரியா தெரிவித்துள்ளமை உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகநாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தன்னிச்சையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. இதனையடுத்து வடகொரியா மீது அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தது.
இந்நிலையில் தென்கொரியாவில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்களின் பின்னர் வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் இணக்கமான சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து கடந்த மாதம் 27 ஆம் திகதி வடகொரிய மற்றும் தென்கொரிய தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அத்துடன் வடகொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபருடனான சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் வடகொரியாவுக்கு அரசியல் ரீதியில் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்ததால்தான் அணு ஆயுத சோதனைகளை நிறுத்தவும், சமரசப் பேச்சுவார்த்தைக்கும் வடகொரியா முன் வந்ததாக அமெரிக்கா கூறி வருகிறது. இது வடகொரியாவை ஆத்திரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: அதிபர் கிம் ஜோங் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் சந்தித்து பேசிய பின் அமைதி பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. கொரிய தீபகற்பம் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. அதை சீர்குலைக்கும் விதத்தில் அமெரிக்காவின் பேச்சு உள்ளது. இதுபோன்று அமெரிக்கா தொடர்ந்து பேசினால், வடகொரியா மீண்டும் தனது பழைய பாதையில் பயணிக்கத் தயங்காது, என்றார்.
இது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன் அமைதி முயற்சிகளில் லேசான பின்னடைவாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.com