மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.
ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.
செறிவூட்டப்பட்ட யூரேனியம் குறைந்த அளவில் மட்டுமே இருக்க வேண்டும், அதுவும் மருத்துவம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய அம்சமாகும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வந்த அதிபர் டிரம்ப், நேற்று முன்தினம் திடீரென ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேவேளையில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் ரஷியா, சிரியா உள்ளிட்ட சில நாடுகள் டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகியவை அறிவித்துள்ளன.
இந்நிலையில், ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ள நிலையில், ஈரான் மீது பொருளாதார தடைகள் விழ வாய்ப்பு உள்ளதால் ஈரான் அரசு கொதித்துள்ளது. பாராளுமன்றத்தில் கூடிய பல எம்.பி.க்கள் அமெரிக்க கொடியை கிழித்து எறிந்து, அந்நாட்டுக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
‘அமெரிக்காவே உனக்கு மரணம் வருகிறது’ என எம்.பி.க்கள் கோஷம் எழுப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
-athirvu.com