சேவியருக்கு வீண் சவால் விட வேண்டாம், அண. பாக்கியநாதன்

இந்நாட்டில் பாரிசான் ஆட்சியில் நடந்த அனைத்து அநியாயங்களுக்கும், பக்காத்தான் ஆட்சியில் போட்டத் திட்டங்களும், தீர்மானங்களும்   நிறைவேறமல் போனதற்கு ம.இ.கா முக்கிய காரணம் என்பதனை மூடிமறைத்து அரசியல் சதுராட்டம் ஆடவேண்டாமென சில ம.இ.கா தலைவர்களை எச்சரிக்க வேண்டியுள்ளது. எங்களைச் சீண்டி பொது விவாதத்திற்கு அழைக்க வேண்டாம். பாரிசானின் 53 ஆண்டு ஆட்சிக்கு துணை நின்ற நீங்கள்தான் அதனால் அவமானப்படுவீர்கள்.

இந்த நாட்டிலேயே பிறந்து மூன்று நான்கு தலைமுறைகள்  இம்மண்ணை தன் உடலாலும் உதிரத்தாலும் மேம்படுத்திய தமிழனுக்கு இல்லை பிறப்பு பத்திரம், அடையாள அட்டை, குடியுரிமை. சொந்த நாட்டில் கல்வியின்றி, வீடின்றி, வேலையின்றி, உணவின்றி ஒரு தலைமுறையையே நாசப்படுத்திய மகா பாதகர்கள் நீங்கள். உங்களின் பண பதவி ஆசைகளுக்காக இச்சமுதாயத்தின் உரிமைகளையே விற்று விட்ட நீங்கள் எங்களை சவாலுக்கு அழைப்பதா?

சிந்தித்து பாருங்கள்: ஓர் இந்தேனிசியரின் மகன் முழு அரசாங்க செலவில் இங்கு கல்விக்கற்று இம்மாநிலத்தின் மந்திரி புசாராகக்கூட  முடியும், எங்கோ இருந்து சில ஆண்டுகளுக்கு முன் இங்கு குடியேறிய இந்தோனிசியருக்கு குடியுரிமையுடன் வாக்காளர் தகுதியும் வழங்கப் படுகிறதே, ஆனால் ஏன் எம்மினத்திற்கு அநீதி இழைத்தீர்கள். அதற்கு ஆட்சியிலுள்ள நீங்கள் இன்றி  யார் காரணம்? அன்று அதைக்கண்டித்து குரல் எழுப்பி இருக்க வேண்டும் வீரமுள்ள ம.இ.கா தலைவர்கள்.

பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களுக்கு நான்கு அமைச்சர்களும் சாத்தியம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் அறிக்கை மீது வினா எழுப்புகிறீர்கள், ஆச்சரியப்படுகிறீர்கள்! அதைக்கூறிய அவரின் தகுதி மீது கேள்வி எழுப்புகிறீர்கள்.

பக்காத்தான் ஆட்சியில் கட்சியின் உள்விவகாரங்களை வெளிப்படையாக பேசுவதை  மக்கள் கண்டிருப்பார்கள்.  ஆனால் அதே போன்று ஒரு திறந்த அணுகுமுறையைப் பின்பற்றி, அரசாங்கத்தின் நடைமுறை விவகாரங்கள் அனைத்தையும் பத்திரிக்கைகளில் வெளியிடுவதற்கு ஆசைதான். ஆனால் அதை நடைமுறைப்படுத்த முடியாத பல கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் விதித்துள்ளதும் உங்கள் பாரிசான்தானே! இத்தனை ஆண்டுகளாக எல்லாவற்றையும் மூடிமறைத்துத்தானே மக்களை ஏமாற்றி இந்நாட்டில் ஆட்சி நடத்திவருகிறீர்கள்.  

முன் கூட்டியே திட்டமிட்டு ஒரு சாலைக்கு டாக்டர் வி.டேவிட்டின் பெயர் சூட்ட அங்கு வந்து இறங்கிய மாநில மந்திரி புசாரை அந்த வைபவத்தை ஒத்திவைக்க வேண்டி நிர்பந்திக்கப்பட்டுள்ளார். அது மாநில அரசின் குற்றமல்ல,  அரசியல் காரணங்களுக்காக அம்னோ எவரின் அதிகாரத்தை பயன்படுத்தியது என்பதனை மாநில மக்கள் பரவலாக அறிந்திருக்கின்றனர்.

அது ம.இ.கா இளைஞர் பகுதித்தலைவர் T.மோகனுக்கு தெரியவில்லையா அல்லது டேவிட் பெயர் சூட்டுவதை தடுத்து அரசியல் ரீதியாக பக்காத்தானை சாட அம்னோவுடன் ம.இ.கா சேர்ந்து நடத்திய கூட்டு சதியா?

பக்காத்தான் ஹிண்ராப்பிற்கு எதுவும் செய்யவில்லை என்பது K.P சாமியின் ஒப்பாரி, ஹிண்ராப் தலைவர்களில் ஒருவரின் பெயரை செனட்டர் பதவிக்கு முன்மொழிந்ததே இந்த பக்காத்தான் அரசுதான் என்பதை அறியவில்லையா? அல்லது அவர் செனட்டராவதை தடுத்து அரசியல் ரீதியாக பக்காத்தானை சாட அம்னோவுடன் ம.இ.கா சேர்ந்து நடத்திய கூட்டு சதியா?

ஹிண்ராப் என்பது வெறும் 5பேர் கொண்ட கூட்டு அல்ல, இந்நாட்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தமானது, அவர்களின் அனைவரது வாழ்க்கைக்கும் விளக்கேற்ற வேண்டியப் பொறுப்பு இவ்வரசினுடையது. இன்று K.P சாமி T.மோகன் உட்பட ஆயிரமாயிர குடும்பங்களுக்கு வழங்கும் இலவச 20 கனமீட்டர் தண்ணீர், தமிழ்ப்பள்ளிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக கிடைத்துவரும் 120 லட்சம் வெள்ளி மானியம், இந்து ஆலயங்களுக்கு வழங்கியுள்ள 65 லட்சம் வெள்ளி மானியம் போன்று எத்தனையோ அனுகூலங்களை சிலாங்கூர் மாநில அரசு எல்லா மக்களுக்கும் வழங்கி வருவதே, பக்காத்தான் அரசின் கடட்பாட்டுக்கும், மக்கள் சேவைகளுக்கும் சான்றாகும்.

இன்று ம.இ.காவிற்கு கிடைத்துள்ள இரண்டாவது அமைச்சர் பதவிக்கூட பக்காத்தானால், ம.இ.காவுக்கு அம்னோயிட்டுள்ள பிச்சை என்பதனை மறந்து பிதற்றாதீர்கள். இன்று இந்திய மக்களுக்காக அவர்களின் உரிமையை தட்டிக்கேட்க பலமான மாற்று அணியான பக்காத்தான் ராயாட் உள்ளதால், இந்தியர்களை திருப்திப்படுத்த, உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழைப்பழந்தான், இலாக்காவற்ற இரண்டாவது அமைச்சர் பதவி என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள். நாங்கள் பட்டியல் போட ஆரம்பித்தால் உங்களிடம் பதில் சொல்ல ஆளில்லை.

எங்களுக்கு ஆட்சியில்  நான்கு அமைச்சர்கள் அல்ல இன்னும் நான்கு நாள்களே அதிகம் கிடைத்தாலும் அதிலும் மக்களுக்கு செவ்வனே சேவை செய்து விட்டு வெளியேறுவோம். வீணர்களுடன் வீண் விவாதம் நடத்தி மக்களின் நேரத்தையும், மாநிலத்தின் வளத்தையும் வீணடிக்க மாட்டோம் என்பது எங்களின் உறுதியான தீர்மானம்  என்பதனைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

TAGS: