காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 52 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதில் 2400 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 2014 காஸா போருக்கு பின்னர் இப்பகுதியில் மிக மோசமான வன்முறை இன்றுதான் நடந்துள்ளது.
ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறக்கவுள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.
மொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவாக செயல்படுவதாக பாலத்தீனர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், பாலத்தீனத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக்கோரி வருகின்றனர்.
தூதரக திறப்பு விழா நிகழ்விற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா தனது கணவரோடு பங்கேற்க உள்ளார்.
காஸாவை ஆட்சி செய்யும் இஸ்லாமியவாத ஆட்சியாளர்கள் கடந்த ஆறு வாரங்களாக பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.
எல்லை வேலியை தாண்டவே போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவீவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலேத்திற்கு மாற்றும் டிரம்பின் முடிவு பாலத்தீனர்களை கோபப்படுத்தியது.
பாலத்தீனர்கள் கிழக்கு ஜெரூசலேமை எதிர்கால பாலத்தீன ராஜ்ஜியத்தின் தலைநகரமாக உரிமை கோரி வருகின்றனர். ஆனால், ஜெரூசலேமையே எப்போதும் தங்கள் தலைநகரமாக இஸ்ரேல் கருதி வந்தது.
ஜெரூசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக கடந்த வருடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததற்குப் பரவலான கண்டங்கள் எழுந்தன. ஜெரூசலேம் விவகாரத்தில் பல தசாப்தங்களாக அமெரிக்கா காத்துவந்த நடுநிலை, டிரம்பின் நடவடிக்கையால் மாறியது.
ஒரு சிறிய இடைக்கால தூதரகம், திங்கட்கிழமை முதல் ஜெருசலேத்தில் ஏற்கனவே உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் இயங்க தொடங்கும்.
ஜெரூசலேத்தில் அமெரிக்க தூதரகத்திற்கான பெரிய இடம் பின்னர் தேர்ந்தேடுக்கப்படும். அப்போது டெல் அவீவ் நகரத்தில் இருந்து முழு தூதரகமும் இங்கு இடம் மாற்றப்படும்.
இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டதின் 70-ம் ஆண்டு நிறைவு நாளில் அன்று புதிய தூதரகத்தைத் திறக்கும் விதமாக திறப்பு விழா தேதி அமைக்கப்பட்டுள்ளது.
காஸா எல்லையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக வரும் செய்திகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பின் (ஐ.நா.) பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தனது கவலையை வெளிப்படுத்தியதாக ‘தி அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
வியன்னாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”அதிக அளவில் மக்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் இருந்து வரும் செய்திகளால் நான் மிகவும் கவலை அடைந்துளேன்” என்று அவர் குறிப்பிட்டார். -BBC_Tamil