கிளர்ச்சியளர்கள் பிடியில் இருந்த வட சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ரசாயன தாக்குதலில் குளோரின் பயன்படுத்தப்பட்டதற்கான வாய்ப்பு உள்ளது என உலக ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பக அமைப்பு கூறியுள்ளது.
ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு சாராகேபில் இயந்திர தாக்கத்தால் சிலிண்டரில் இருந்து குளோரின் வெளியேற்றப்பட்டது என்பதை கண்டுபிடித்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டவில்லை.
முன்னதாக மருத்துவ குழுக்களும் செயற்பாட்டாளர்களும், அரசு ஹெலிகாப்டர் மூலமாக குளோரின் நிரப்பப்பட்ட குண்டுகள் வீசியதாக தெரிவித்தன.
சிரிய அரசு திரும்பத்திரும்ப ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தது.
எனினும் ஐநா – ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு ஆகியவற்றின் கூட்டுப்பணி முடிவுக்கு வந்துள்ளது. அரசுப் படைகள் நரம்புகளை தாக்கும் சரின் மற்றும் குளோரின் ஆகியவற்றை நான்கு தாக்குதல்களிலும் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது.
கடந்த மாதம் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த டூமாவில் நடந்த ஒரு சந்தேக ரசாயன தாக்குதலில் பொதுமக்களில் 40 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அத்தாக்குதல் குறித்து ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு (OPCW) விசாரித்து வருகிறது.
டூமாவில் அரசுப்படைகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை உறுதியாக கூறுகின்றன. மேலும் இத்தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவின் ரசாயன ஆயுத கட்டமைப்பை மீது ஏவுகணை தாக்குதலையும் நடத்தின.
பிப்ரவரியில் என்ன நடந்தது?
இட்லிப் மாகாணத்தைச் சேர்ந்த சாராகேபில் பிப்ரவரி நான்காம் தேதி தாக்குதல் நடந்தது.
அரசு தளத்தில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டரில் இருந்து பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதால் நகரமே சிக்கித்தவித்தது என ஒரு மருத்துவர் கூறினார்.
குளோரின் தாக்குதலுக்குப் பிறகு மக்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டனர். மேலும் சுவாசப் பிரச்னை மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்னைகள் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தன என்கிறார் மருத்துவர்.
சிரியா சிவில் பாதுகாப்பு அமைப்பானது ஒன்பது பேர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறியது. மேலும் இணையத்தில் அது வெளியிட்ட ஒரு காணொளியில் நிறைய பேர் சுவாசிக்க சிரமப்படுத்ததால் தண்ணீர் தெளிக்கபட்டிருந்தது.
புதன்கிழமையன்று ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பானது அதன் உண்மை கண்டறியும் பணியில் இந்த நிகழ்வில் குளோரின் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாய்ப்பு இருக்கிறது என உறுதி செய்வதாக அறிவித்தது.
இம்முடிவுஎப்படி வந்தது?
- கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலிண்டர்களிலும் குளோரின் இருப்பு உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.
- நேரில் கண்டவர்கள் சாட்சியம் .
- குளோரினின் அசாதாரண இருப்பை அங்குள்ள சுற்றுப்புறச் சூழல் காரணிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகள் உறுதிப்படுத்தியள்ளன.
- உடலில் குளோரின் வெளிப்பாடு இருந்ததற்கான அறிகுறிகள் இருப்பதை அத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூலமாக கண்டறியப்பட்டது.
” விஷத்தன்மை வாய்ந்த ரசாயன ஆயுதங்களை தொடர்ச்சியாக யார் பயன்படுத்தினாலும் எதற்காக பயன்படுத்தியிருந்தாலும் நான் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார். -BBC_Tamil