இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும்வரை தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தையை தொடர முடியாது என்று வட கொரியா அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கும் மூத்த வட கொரிய தலைவர் ஒருவர் தென் கொரிய அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு தகுதியற்ற மற்றும் அறிவற்றவர்கள் என்று வர்ணித்துள்ளார்.
தென் கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியில் கோபம் கொண்டுள்ளது வட கொரியா.
வட கொரிய தலைவர் கிம் ஜோன் -உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே திட்டமிடப்பட்ட சந்திப்பு நடக்குமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா வட கொரியா இடையேயான பேச்சுவார்த்தைக்கு பாலமாக நாங்கள் செயல்படுவோம் என்று தென் கொரியா கூறி இருந்தது.
கோப மொழி
வட கொரிய ஊடகமான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்திகளின் படி, முன்னதாக தென் கொரியா நோக்கி வட கொரியா பயன்படுத்தும் கோப சொற்களை மீண்டும் வட கொரியா பயன்படுத்த தொடங்கி உள்ளது தெரிகிறது.
இந்த பேச்சுவார்த்தைக்கு வட கொரியா சார்பில் தலைமை வகிக்கும் ரி சன், வட கொரியாவிலிருந்து வெளியேறிய ஒருவரை தென் கொரிய நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்ததை விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவுடன் தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதால் கோபமடைந்த வட கொரியா முன்னதாக தென் கொரியாவுடன் புதன்கிழமை நடத்த இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.
வட கொரியா ஏன் கோபமடைந்தது?
அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சிகள் வட கொரியாவை அடிக்கடி கோபப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், 100 போர் விமானங்கள், எண்ணிக்கை குறிப்பிடப்படாத பி-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எஃப்-15கே ரக ஜெட் ஆகியவற்றுடன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவும் இணைந்து இந்த சமீபத்திய ராணுவ பயிற்சியினை நடத்தியது.
இந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும்,படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வட கொரியா கூறியுள்ளது.
1953ல் அமெரிக்கா மற்றும் தென் கொரியா கையெழுத்திட்ட ஒரு பரஸ்பர பாதுகாப்பு உடன்பாட்டின் அடிப்படையில், இந்த பயிற்சிகள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே என இரு நாடுகளும் அழுத்தமாகக் கூறியுள்ளன.
ஆனாலும், புதன்கிழமை தென் கொரியாவுடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை வட கொரியா ரத்து செய்துள்ளது. இதன்மூலம், அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. -BBC_Tamil