இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. தூரத்துக்கு அசல்கட்டுப்பாட்டு கோடு எல்லை அமைந்துள்ளது. இதில் இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில் அருணாசலபிரதேச எல்லையையொட்டி லூன்சே என்னும் பகுதியில் சீனா அரசு தங்கச் சுரங்கம் தோண்டி வருகிறது. இங்கு சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு(சுமார் ரூ.4 லட்சம் கோடி) தங்கம், வெள்ளி மற்றும் இதர விலையுயர்ந்த உலோக தாதுக்கள் பூமிக்குள் இருப்பதாக ஹாங்காங்கில் வெளிவரும் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ் அண்மையில் தகவல் வெளியிட்டது.
இந்திய எல்லைப் பகுதி அருகே பெரும் அளவில் சுரங்கம் தோண்டு பணிகளில் சீனா ஈடுபட்டு வருவது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் எல்லைப் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங் கூறுகையில், “சீனா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அவ்வப்போது பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தங்கச் சுரங்கம் தோண்டப்படும் பகுதி முழுக்க முழுக்க சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமானது. இந்த பகுதியை அனுபவிக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவே அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது” என்றார்.
-athirvu.in