‘வடகொரிய அதிபரை சந்திப்பது தாமதமாகலாம்’ – டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உடன் அடுத்த மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு தள்ளிப் போகலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

அந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் வெள்ளை மாளிகை வந்துள்ளார். அவரை வரவேற்கும்போது டிரம்ப் இந்த தகவலை தெரிவித்தார்.

கிம் உடனான சந்திப்பில் ‘எதை எதிர்பார்க்கலாம், எதை எதிர்பார்க்கக்கூடாது’ என்பதை விளக்கவே மூன் ஜே-இன் அமெரிக்கா சென்றுள்ளதாக தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களை அணு ஆயுதங்களை கைவிடுமாறு வலியுறுத்தினால், டிரம்ப் உடனான சந்திப்பை புறக்கணிக்கலாம் என்று கடந்த வாரம் வடகொரியா அச்சுறுத்தியிருந்தது.

“இது இப்போது நடக்கவில்லையென்றால், பின்னாளில் நடக்கலாம்,” என்று மூன் உடனான பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் டிரம்ப் கூறியுள்ளதாக ஏ.எப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

கிம் ஜாங் உன்

ஜூன் மாதத்தில் அந்த சந்திப்பு நடக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று டிரம்ப் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

ஏப்ரலில் மூன் மற்றும் கிம் இடையே சந்திப்பு முடிந்துள்ள நிலையில், ஜூன் 12 அன்று சிங்கப்பூரில் கிம் ஜாங்-உன்னை சந்திக்க இருந்தார் டிரம்ப்.

நல்லெண்ண நடவடிக்கையாக தனது அணு ஆயுத சோதனைத் தளம் ஒன்றை அழிக்க வடகொரியா முன்வந்துள்ளது. மோசமான வானிலையால் அந்தப் பணிகள் தாமதமடைந்துள்ளன. -BBC_Tamil