வடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு..

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிம் உடனான ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடன் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வடகொரிய வெளியுறவு துறை மந்திரி கிம் கை குவான் கூறுகையில், ‘எங்கள் நாட்டு அதிபருடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க நாங்கள் தயார்’ என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘வடகொரியாவின் ஆக்கப்பூர்வமான இந்த அறிவிப்பு நல்ல செய்தியாகவும், இதம் அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த முடிவு நீண்டகால அமைதி மற்றும் நீடித்த வளமையை பாதுகாக்கும் வகையில் எதுவரை போகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு காலம்தான் பதில் சொல்லும்’ என குறிப்பிட்டுள்ளார்.

-athirvu.in