‘ஸ்பைடர் மேன்’ போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர்

பாரிஸில் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார்.

மேற்கு ஆஃபிரிக்க நாடான மலியிலிருந்து குடிபெயர்ந்தவர் கசாமா. அவர் குழந்தையை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலவாக பரவியது.

ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு பால்கனியில் இருந்து மற்றொரு பால்கனிக்கு தாவி, 4 வயது குழந்தையை காப்பாற்றினார்.

கசாமாவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க, ப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அவரை தன் மாளிகைக்கு அழைத்துள்ளார். -BBC_Tamil

பரிஸ் நகரின் ‘ஹீரோ’வுக்கு வாழ்த்துக்கள்…!!!

நேற்று சனிக்கிழமை, இரவு 8 மணி இருக்கும். பரிஸ் 18 ம் வட்டாரத்தில் உள்ள, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 4 வது மாடியிலே, நான்கு வயது குழந்தை ஒன்று தவறி கீழே விழப்போகிறது. ஆனால் தெய்வாதீனமாக அக்குழந்தை ஒரு கம்பியிலே பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தது. எந்த நேரத்திலும் விழுந்துவிடும் என்கிற நிலை.

அப்போது கீழே இருந்த ஒரு கெபாப் உணவகத்தில் உதைபந்தாட்டப் போட்டியினை ( Liverpool vs Real Madrid final ) காண வந்திருந்த ஒரு இளைஞனுக்கு மக்கள் கூக்குரல் இடும் சத்தம் கேட்டது. ஓடிச் சென்று வெளியே பார்த்தான். நிலைமை மோசம்.

உடனே மின்னல் வேகத்தில், வெறும் 32 செக்கன்களில் 4 ம் மாடிக்குத் தாவி ஏறி குழந்தையைக் காப்பாற்றி விட்டான். அந்த இளைஞனின் பெயர் Mamoudou Gassama.

குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய இந்த இளைஞனின் வீரச் செயல்தான் இன்று பிரான்ஸ் முழுவதும் பேச்சு. ‘பரிசின் ஹீரோ’ என ஊடகங்களும் மக்களும் போற்றிப் புகழ்கிறார்கள்.

பரிஸ் முதல்வர் ஆன் இதால்கோ ‘ 18 ம் வட்டாரத்தின் ஸ்பைடர்மான்’ என்று புகழ்ந்துள்ளார்.

இந்த இளைஞனுக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கோரிக்கைகள் குவியத் துவங்கியுள்ளன.

வாழ்த்துக்கள் Mon frère…!!!!

( அந்த பரபரப்பான காணொளி கீழே )

———

Update : ( 28/05/2018 )

நண்பர்களே, நமது ஹீரோ மமது ( முகம்மது ) சற்று முன்னர் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனைச் சந்தித்தார்.

இவருக்கு உடனடியாக பிரெஞ்சுக் குடியுரிமையும், பிரெஞ்சு தீயணைப்பு படையில் ( Pompiers ) வேலையும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மிக்க மகிழ்ச்சி. நன்றி ஜனாதிபதி அவர்களே..!!!!