நியூசிலாந்து: 1,50,000 பசுக்களை அழிக்க முடிவு

வெல்லிங்டன், ‘மைக்ரோபிளாஸ்மா போவிஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று நோயைத் தடுக்கும் விதமாக 1,50,000 பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

உலகிலேயே அதிக அளவில் பால் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நியூசிலாந்து முதலாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் ‘மைக்ரோபிளாஸ்மா போவிஸ்’ எனப்படும் பாக்டீரியா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது.

இந்த பாக்டீரியாவில் உணவு பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இருந்த போதிலும் நியூசிலாந்தின் முக்கிய பொருளாதார தொழிலான பால்வளம் மற்றும் கால்நடை உற்பத்தியை இது பாதிக்கும். இதனால் பாக்டீரியா தொற்று கண்டறியப்பட்ட பண்ணைகளில் உள்ள பசுக்கள் மற்றும் ஆரோக்கியமாக உள்ள சில பசுக்களையும் அழிக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த அழிப்பு நடவடிக்கை குறித்து அந்நாட்டுபிரதமர் கூறுகையில், ‘நியூசிலாந்து பொருளாதாரத்தின் பால்வளம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாகும். இந்த  ஒட்டு மொத்த பசு ஒழிப்பை யாரும் விரும்புவதில்லை, இது மிகவும் கடினமான முடிவு, ஆனால் இதனை செய்யாவிட்டால் நியூசிலாந்து நாட்டின் கால்நடை வளம் அழிந்து விடும். உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால், நாட்டில் உள்ள 20000 பால் பண்ணைகள் மற்றும் மாட்டிறைச்சி நிலையங்களை காக்க முடியாமல் போய்விடும்’ என்று பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

-dailythanthi.com