அமெரிக்காவுக்கு கிம் யோங் சால் வருகை தருவதை உறுதிப்படுத்தினார் அதிபர் டிரம்ப்

அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையேயான சமாதானத்தை முன்னெடுக்கும் உச்சிமாநாடு நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளநிலையில் அதற்குத் தயாராவதற்காக வடகொரியாவின் மிகமூத்த உயர் அதிகாரிகளில் ஒருவர் அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளார்.

அமெரிக்காவுக்கு கிம் யோங் சால் வருகை தரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார் அதிபர் டிரம்ப்.

”வடகொரியாவுக்கு நான் எழுதியுள்ள கடிதத்திற்கு வலுவான நல்ல பதில் கிடைத்திருக்கிறது. வடகொரியாவின் துணை தலைவர் கிம் யோங் சால் தற்போது நியூயார்க்குக்கு வந்துகொண்டிருக்கிறார். உச்சிமாநாட்டை கருத்தில்கொண்டு தற்போது கூட்டங்கள் நடைபெறுகின்றன.” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜெனெரல் கிம் யோங் சால் அமெரிக்காவுக்கு பெய்ஜிங் வழியாக வரவுள்ளார் என தென் கொரியாவின் செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

2000-த்திற்கு பிறகு அமெரிக்காவுக்குச் செல்லும் வடகொரியாவின் மிக மூத்த அதிகாரி என்ற பெயரை பெறுகிறார் யோங் சால்.

அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் சந்திக்கும் உச்சிமாநாட்டிற்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக இது இருக்கக்கூடும்.

கடந்த வாரம் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்ததிலிருந்து இம்மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகம் எழுந்தது.

ஆனால் திட்டமிட்டபடி சிங்கப்பூரில் ஜூன் 12ஆம் தேதி மாநாட்டில் பங்கேற்க இரு நாடுகளும் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்க அதிபர் பதவியிலிருப்பவரை வடகொரிய தலைவர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

புதன்கிழமையன்று ஜெனெரல் கிம் நியூயார்க்குக்கு விமானம் வாயிலாக பயணிக்க திட்டமிட்டுள்ளார் என பெய்ஜிங்கில் உள்ள சீன அதிகாரிகளிடம் பேசிய பிறகு செய்தி வெளியிட்டுள்ளது தென் கொரிய செய்தி முகமையான யோன்ஹாப்.

முன்பே திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வடகொரியா ஆர்வமுடன் இருப்பதை ஜெனரல் கிம் அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ள நிகழ்வு காட்டுகிறது.

டிரம்ப்-கிம் பேச்சுவார்த்தைக்கான தயாரிப்பில் அமெரிக்கா - வட கொரியா

யார் இந்த ஜெனெரல் கிம் யோங் சால்?

72 வயதாகும் கிம் யோங் சால் தென் கொரியாவில் ஒரு சர்ச்சைக்குரிய நபராக பார்க்கப்படுகிறார். மேலும் இதற்கு முன் இரு கொரிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக இருந்துள்ளார்.

ராணுவ உளவுப்பிரிவு தலைவராக இவர் பணியாற்றிய காலத்தில், 46 மாலுமிகளை கொன்ற தென் கொரிய போர்க்கப்பலை தாக்கி மூழ்கடித்தது மற்றும் சோனி பிக்சர்ஸை ஹேக்கிங் செய்தது உள்ளிட்ட தென் கொரிய இலக்குகள் மீது நடந்த தாக்குதல்களின் பின்னணியில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்நிகழ்வுகள் காரணமாக அமெரிக்கா இவர்மீது 2010 மற்றும் 2015 ஆண்டுகளில் தனிநபர் மீதான தடையை விதித்தது.

2016-ல் ஆணவ நடத்தைக்காக தண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோதிலும் ராணுவத்திலும் கட்சியிலும் தலைமை பொறுப்புகளைத் தொடர்ந்தார்; மேலும், வடகொரியாவின் ஆட்சிப் பிரதிநிதி குழுவின் தலைவராக தென் கொரியாவில் நடந்த பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக்கின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.

வடகொரியாவின் தலைவர்கள் பக்கத்தில் மிகவும் செல்வாக்கான நபராக இருக்கிறார் சால். சீனா மற்றும் தென் கொரிய தலைவர்களுடன் சந்திப்புகளில் பங்கேற்றுள்ளார மற்றும் பியோகியாங்கில் அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்பியோவையும் சந்தித்துள்ளார்.

இவாங்கா டிரம்ப் அருகில் ஜெனெரல் கிம்

பியோங்சங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவுக்கு இவர் அனுப்பப்பட்டிருந்தார். அங்கு டிரம்பின் மகளும் ஆலோசகருமான இவாங்கா டிரம்புக்கு அருகில் உட்கார்ந்திருந்தார்.

செவாய்க்கிழமையன்று சிங்கப்பூரில் வட கொரிய அதிகாரிகளை அமெரிக்காவில் இருந்து ஒரு குழு சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பன்முன்ஜோமில் அதிபர் கிம்மும், தென் கொரிய அதிபர் மூன் இடையே வியப்பூட்டும் ஒரு சந்திப்பு கடந்த வார இறுதியில் நடந்ததையடுத்து சிங்கப்பூரில் இந்தச் சந்திப்பு நிகழவுள்ளது. இரு அதிபர்களுக்கு இடையே நடந்த சந்திப்பில் அமெரிக்க – வடகொரிய உச்சிமாநாடு நடத்தப்படவேண்டுமென இருவரும் முடிவெடுத்தனர்.

முன் ஜே- இன்

அமெரிக்கா – தென் கொரியா இடையேயான உச்சிமாநாடு நடக்குமா என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை ஆனால் இப்போது நடக்கும் பேச்சுவார்த்தையில் பியோங்கியாங்கின் அணு சக்தி திட்டம் குறித்து பேசப்படும் மேலும் கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலையை குறைப்பதற்கான வழியாகவும் இருக்கும்.

இந்தச் சந்திப்பு உறுதிப்படுத்தப்பட்டால் கடந்த 2000-த்தில் வாஷிங்டனுக்கு வடகொரியாவின் உயர் ராணுவ அதிகாரியான ஜோ ம்யோங் ரோக் சென்ற பிறகு அமெரிக்காவுக்குச் செல்லும் வட கொரியாவின் உயர் அதிகாரியாக ஜெனெரல் கிம் இருப்பார்.

ஜோ ம்யோங் ரோக் அமெரிக்காவுக்குச் சென்றபோது அப்போதைய அதிபர் பில் கிளின்டனைச் சந்தித்தார் மேலும் பென்டகனில் நுழைந்த முதல் வடகொரியா அதிகாரியாகவும் இருந்தார். -BBC_Tamil