பீஜிங், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே எல்லை மீறிய தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் போர்நிறுத்த உடன்பாடு குறித்து இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் அனில் சவுகானும், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் சகிர் ஷம்சத் மிர்சாவும் கடந்த மே 29-ம் தேதி தொலைபேசியில் ‘ஹாட்லைன்’ வசதி மூலமாக பேசினர். எல்லை கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லை ஆகிய இடங்களில் உள்ள நிலவரம் பற்றி ஆய்வு செய்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, 2003-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிப்பது என்றும், இருதரப்பிலும் போர் நிறுத்த மீறலில் ஈடுபடுவது இல்லை என்றும் உடன்பாடு ஏற்பட்டது. இதனிடையே இரு நாடுகளுக்கிடையேயான உடன்பாடு குறித்து சீன அரசு தனது வரவேற்ப்பை தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் ஹுவா சூயூஇன்ங் செய்தி நிருபர்களிடம் கூறுகையில்,
”இரு நாடுகளுக்கிடையே எடுக்கப்பட்ட இந்த சாதகமான முடிவை நாங்கள் வரவேற்கிறோம். எல்லை மீறிய தாக்குதல் பிரச்சனைகள் தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் நிரந்தர தீர்வு காண முடியும் மேலும் இரு நாட்டுகளுக்கிடையே அமைதியை நிலைநாட்ட முடியும் என நாங்கள் நம்புகிறோம்” என கூறினார்.
-dailythanthi.com