ஹிசாம்: அமைதியாகக் கூடுதல் சட்ட மசோதா திரும்பப் பெற மாட்டாது

அமைதியாகக் கூடுவதற்கு வகை செய்யும் சட்ட மசோதாவை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உள்துறை அமைச்சர் ஹிசாம்முடின் ஹுசேன் கூறினார்.

முதல் வாசிப்பிற்காக செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்றுக்கொள்வாரா என்று ஹிசாமுடினிடம் செய்தியாளர்கள் வினவியபோது அவர் முடியாது என்று கூறினார்.

“இல்லை” என்று கூறிய ஹிசாம், அந்த மசோதா மீதான விவாதம் இன்னும் நாடாளுமன்றத்தில் நடத்தப்படாத வேளையில் அதற்கு எதிராக எதிர்த்தரப்பினர் பேசுவது அவசரப்பட்ட செயலாகும் என்று மேலும் கூறினார்.

எதிர்த்தரப்பினர் அதை அரசியல் இலாபம் பெறுவதற்காக பயன்படுத்துகின்றனர் என்றாரவர்.

இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் அந்த மசோதா மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதோடு போலீசாருக்கு விரிவான அதிகாரங்கள் அளித்திருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைக் கூறினார்.