மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. சவூதி பட்டத்து இளவரசரை மிரட்டிய அல் கொய்தா!

ரியாத்: சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அல் கொய்தா இயக்கம் மிரட்டி இருக்கிறது. சல்மான் செய்யும் செயல்கள் எதுவும் மக்களுக்கு நன்மை பயக்காது என்று அல் கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.

சவுதியின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அங்கு தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த நாட்டில் சிறிய சிறிய அளவில் நிறைய புரட்சிகள் ஏற்பட்டு வருகிறது. இது சவுதியை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி கொண்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.

பெண்களுக்காக

அதிரடியாக அந்த நாடு பல விஷயங்களை மாற்ற இருக்கிறது. அமெரிக்கா போல மாறும் நோக்கத்தில் செயல்பட்டு வளர்கிறது. முதலில் பெண்களுக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டது. அதன்பின் சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் தமிழ் படங்களும் அங்கு வெளியாக உள்ளது. அதேபோல் இன்னும் சில வருடங்களில் பெண்களுக்கு பர்தா கட்டாயம் இல்லை என்று சட்டம் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பொழுதுபோக்கு நகரம்

மேலும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டில் ”பொழுதுபோக்கு நகரம்” ஒன்றை உருவாக்க இருக்கிறார். இன்னும் சில வருடங்களில் இந்த நகரம் மொத்தமாக கட்டி முடிக்கப்படும். ரியாத்தின் மேற்கு பகுதியில் ஒரு பகுதி முழுக்க இது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட புதிய நகரத்தை உருவாக்க இருக்கிறார்கள். இதன் மூலம் அதிக வருவாய் பெற திட்டமிட்டுள்ளனர்.இந்த நகரம் குட்டி நியூயார்க், சிங்கப்பூர், மலேசியா போல இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரிய அளவில் இதனுள் இஸ்லாமிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது.

அல் கொய்தா

இதற்கு இப்பொது அல் கொய்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சவூதி பட்டத்து இளவரசர் செய்வது கொஞ்சம் கூட சரியில்லை என்று கூறியுள்ளது. அவர் பெண்களுக்கு தேவையில்லாத சுதந்திரம் கொடுக்கிறார் என்று கண்டனம் தெரிவித்துள்ளது. மிகவும் நல்லதொரு இஸ்லாமிய நாட்டை அவர் மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி நாசம் செய்கிறார் என்று கோபமாக பேசியுள்ளது.

அல் கொய்தா எச்சரிக்கை

கிறிஸ்துவ பழக்க வழக்கங்களை நோக்கி அவர் மக்களை திருப்புகிறார். அமெரிக்காவில் கடைபிடிக்கப்படும் கொண்டாட்டங்களை அவர் சவுதிக்கு கொண்டு வர பார்க்கிறார். இதை அல் கொய்தா வன்மையாக கண்டிக்கிறது. அவர் உடனே தன்னுடைய நடவடிக்கைகளை மாற்ற வேண்டும். இல்லையென்றால் அவர் மிகப்பெரிய மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும், என்று வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

tamil.oneindia.com