அனைத்து றோஹிங்கியா அகதிகளையும் மீளப் பெறும் திட்டமுள்ளதாக மியான்மார் தெரிவிப்பு

பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள 700 000 றோஹிங்கியா அகதிகளிலும் விரும்பினால் அவர்கள் அனைவரையுமே மியான்மாருக்கு மீளப் பெறும் திட்டமுள்ளதாக மியான்மார் அரசு தெரிவித்துள்ளது.

இத்தகவலை மியான்மாரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தௌங் துன் சனிக்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்ற ஷங்க்ரிலா என்ற பிராந்தியப் பாதுகாப்பு மாநாட்டின் போது வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் தௌங் துன் இடம் ஐ.நா இன் கட்டமைப்பின் அடிப்படையில் மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து றோஹிங்கியாக்களினதும் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் பொறுப்புணர்வு முன்னெடுக்கப் படுகின்றதா எனக் கேள்வி எழுப்பப் பட்டது. 2005 ஆம் ஆண்டு ஐ.நா இனது உலக மாநாட்டின் போது மியான்மார் உட்பட சர்வதேசங்கள் தமது நாட்டிலுள்ள பொது மக்களை இனப்படுகொலை, யுத்தக் குற்றச் செயல்கள், இனவழிப்பு, மனிதாபிமானத்துக்கு எதிரான வன்முறை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பது தொடர்பில் தமக்கிடையே உதவி செய்து கொள்வது என உறுதி எடுத்துக் கொண்டிருந்தன.

இந்நிலையில் ஐ.நா மற்றும் ஏனைய தொண்டு நிறுவனங்களின் தகவல் படி ஆகஸ்ட் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 700 000 றோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மாரில் இருந்து இராணுவத்தின் திட்டமிடப் பட்ட வன்முறையில் இருந்து தப்பிப்பதற்காகவும், கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் அண்டை நாடான பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதனை மியான்மார் அரசின் பௌத்த பேரினவாதத்தின் திட்டமிடப் பட்ட இனவழிப்பு என்று ஐ.நா தெரிவித்துள்ள நிலையில் இன்னும் 2 வருடங்களுக்குள் பங்களாதேஷிலுள்ள றோஹிங்கியா அகதிகளைத் தாம் மீளப் பெறுவது என மியான்மார் ஜனவரியில் ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால் இன்னமும் இப்பணியை முழு வீச்சுடன் மியான்மார் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com