வர்த்தக தடை விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்கா வர்த்தக தடைகளை அறிமுகப்படுத்தினால், அந்நாட்டுடன் உள்ள அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் செல்லாமல் ஆகிவிடும் என சீனாவின் அரசு ஊடகமான சின்ஹூவா எச்சரித்துள்ளது.

சீனாவின் லியோ ஹ மற்றும் அமெரிக்காவின் வர்த்தக செயலாளரான வில்பர் ராஸ், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனையடுத்து, சீனா பல நாடுகளிடம் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டது.

சீன பொருட்கள் மீது 50 பில்லியன் டாலர்கள் வரை அதிக கட்டணங்கள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அச்சுறுத்தியதையடுத்து வில்பர் ராஸ் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிகளுக்கு அமெரிக்க கட்டணங்கள் விதித்தது ஜி7 நாடுகளை கோபப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

“ஒருசில நாட்களில்” வர்த்தகப் போர் தொடங்கலாம் என ஃபிரான்ஸ் நாட்டின் நிதித்துறை அமைச்சர் ப்ருனோ லெ மெர் எச்சரித்தார்.

“வர்த்தகத்தில் பல ஆண்டுகளாக மற்ற நாடுகளால் அமெரிக்கா வஞ்சிக்கப்பட்டு வந்ததாக” அதிபர் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

எஃகு மீது விதிக்கப்பட்ட கட்டணங்கள், அமெரிக்க எஃகு நிறுவனங்களை பாதுகாக்கும் என்று குறிப்பிட்ட டிரம்ப், தேசிய பாதுகாப்புக்கு இது மிக முக்கியம் என்று தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள் சந்திக்கும் தடைகளை பற்றியும் அவர் புகார் கூறியிருந்தார்.

“புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டிய நேரமிது” என்றார் அவர்.

சீனா கூறுவது என்ன?

பீஜிங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கடந்த மாதம் அமெரிக்காவின் பொருட்கள் மற்றும் சேவைகள் அதிக அளவில் வாங்கப்படும் என்று வாவாஷிங்டனில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை பற்றி இருந்ததே தவிர விளைவுகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

“வாஷிங்கடனில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த, விவசாயம் மற்றும் எரிபொருள் ஆகிய துறைகளின் இருபக்கமும் சரியான தொடர்புகளில் உள்ளன. மேலும், இதில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும், இது தொடர்பான தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்பட உள்ளது” என்று அறிக்கையில் கூறப்பட்டது.

ஆனால், சின்ஹூவாவின் அறிக்கையானது வர்த்தக போருக்கு எதிராக எச்சரிப்பதாக இருந்தது.

“சீர்திருத்தம், உள்நாட்டு தேவைகளை திறந்து, அதனை விரிவுபடுத்துதல் போன்றவை சீனாவின் தேசிய உத்திகள். இதனை மாற்றிக் கொள்ள முடியாது” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

“அமெரிக்க வர்த்தக தடைகளை அறிமுகப்படுத்தினால், கலந்தாலோசிக்கப்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் அனைத்தும் செல்லாமல் போய்விடும்” என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. -BBC_Tamil