கிராமம், நகரமென தனது வழியில் உள்ள அனைத்தையும் துடைத்தெறிந்து கொண்டிருக்கிறது குவாட்டமாலாவில் உள்ள போகோ எரிமலையிலிருந்து புறப்பட்ட எரிமலை குழம்பும், புகையும்.
இந்த எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்தது. இதிலிருந்து எழுந்த புகையும், சேரும், சரிவில் இருந்த கிராமங்களை அப்படியே புதைத்துவிட்டது.
இந்த எரிமலை வெடிப்பினால் 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.எழுபத்து ஐந்து பேர் பலியாகி இருக்கிறார்கள், 192 பேரை காணவில்லை என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.
- குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் 62 பேர் பலி
- குவாட்டமாலா எரிமலை வெடிப்பு: 10 கிலோமீட்டர் வரை எழும்பிய சாம்பல்
மீண்டும் செவ்வாய்க்கிழமை எரிமலை வெடித்ததில் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன.
மரணங்கள் ஏற்பட்டது எதனால்?
பேரிடர் மீட்பு முகமையின் தலைவர் செர்ஜியோ கபானஸ், “எங்களிடம் மரணித்தவர்கள் எத்தனை பேர், காணாமல் போனவர்கள் எத்தனை பேர், அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற தகவல் இருக்கிறது.” என்று கூறியதாக எ.எஃப்.பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
குவாட்டமாலா பேரிடர் தடுப்பு பிரிவின் இயக்குநர், “ஞாயிற்றுக்கிழமை எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மக்களுக்கு வெளியேறுதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்படவில்லை” என்கிறார்.
உள்ளூர் மக்களுக்கு அவசர கால பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அதை அவர்கள் செயல்படுத்துவதற்குள் எல்லாம் நடந்துவிட்டது. எரிமலை வெடிப்பு அதன் உடனடி தாக்கமும் மிக வேகமாக இருந்தது என்கிறார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் போது அதிலிருந்து வெளியேறிய எரிமலை குழம்பு, வெப்ப வாயு சரிவிலிருந்த அனைத்தையும் விழுங்கி சென்றது.
எரிமலை குறித்து ஆய்வு செய்யும் ஜனைன் கிரிப்பர் பிபிசியிடம் எரிமலை வெடிப்பின் போது அதிலிருந்து வழிந்தோடும் எரிமலை சேறு குறித்து குறைத்து மதிப்பிட கூடாது, அது மிகவும் ஆபத்தானது என்றார்.
‘எனக்கென்று யாருமில்லை’
எல் ரொடயோ கிராமத்தை சேர்ந்த போரிஸுக்கு இப்போது சொந்தமென்று யாருமில்லை. ஞாயிற்றுக்கிழமை எரிமலை வெடித்ததில் தனது நேசத்திற்குரிய அனைவரையும் இழந்துவிட்டார்.
ஓர் இரவில் தனது வாழ்க்கையே முற்றும் முழுவதுமாக மாறிவிட்டது என்கிறார் போரிஸ்.
அவரின் மனைவி, மனைவியின் பெற்றோர், மைதுனன் என அனைவரையும் இழந்துவிட்டார் போரிஸ்.
“நான் குழந்தைகளின் சடலங்களை பார்த்தேன். அவர்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காக ஒருவரை ஒருவர் இறுக அணைத்து இருந்தனர்” என்று அழுகையின் இடையே சோகம் அப்பிய குரலில் தம்மிடம் கூறியதாக கூறுகிறார் பிபிசி செய்தியாளர் வில் கிராண்ட்.
இது போரிஸின் கதை மட்டுமல்ல, அந்த ஊரின் பெரும்பாலானவர்களின் கதையும் இதுதான். எரிமலை வெடித்ததில் அந்த எல் ரொடயோ கிராமமே வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்பட்டுவிட்டது. -BBC_Tamil