பிரான்ஸ் நாட்டில் மட்டும் 2016 முதல் 2017ஆம் ஆண்டு வரை புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக குறைந்துள்ளது.
எனினும், கடுமையான முயற்சிகளுக்கு மத்தியிலும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒரு சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
கடந்த மே 31 அன்று உலக புகையிலை ஒழிப்பு நாள் கடைபிடிபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகமாக மற்றும் குறைவாகப் புகைக்கும் நாடுகளின் பட்டியலைத் தருகிறோம்.
1. கிரிபாட்டி
தீவு நாடான கிரிபாட்டியில் புகைபிடிக்கும் விகிதம் அதிக அளவில் உள்ளது. ஆண்களில் மூன்றில் இரண்டு பங்கினரும், பெண்களில் மூன்றில் ஒருவருக்கும் அதிகாமானவர்களும் புகை பிடிக்கின்றனர்.
இந்த பசிபிக் தீவின் மக்கள்தொகை ஒரு லட்சத்து மூன்றாயிரம் மட்டுமே. வலிமையற்ற புகைப்பழக்க கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான குறைந்த வரி ஆகியன இந்த விகிதம் அதிகமாக இருக்கக் காரணம்.
2. மான்டிநெக்ரோ
கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டிநெக்ரோ, 46 சதவிகிதத்துடன் ஐரோப்பாவிலேயே அதிக புகை பிடிக்கும் விகிதத்தை கொண்டுள்ளது.
6,33,000 மக்கள்தொகை உடைய, பால்கன் மலையை ஒட்டியுள்ள இந்த நாட்டில், சட்டப்பூர்வ வயதுடைய ஒருவர் ஆண்டுக்கு 4,124 சிகரெட்டுகளை புகைக்கிறார்.
பொது இடங்களில் புகைப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், அலுவலகங்கள், விடுதிகள் , பொது போக்குவரத்து ஆகிய இடங்களில் புகைப்பது அதிகமாக உள்ளது.
3. கிரீஸ்
உலகிலேயே மூன்றாவது அதிக புகை பிடிக்கும் விகிதம் உள்ள கிரீஸில் பாதிக்கும் அதிகமான ஆண்களும் 35% பெண்களும் புகை பிடிக்கின்றனர்.
2008 முதல் பொது இடங்களில் புகைக்க தடை உள்ளபோதிலும் அதை யாரும் அதிகமாக பின்பற்றுவதில்லை.
சட்டவிரோத சிகரெட் கடத்தல் இங்கு பரவலாக உள்ளது. அதனால் அரசுக்கு 2019இல் ஒரு பில்லியன் யூரோ வரி வருவாய் இழப்பு உண்டாகும் என்று யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் சந்தை ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
4. கிழக்கு தைமூர்
கிழக்கு தைமூரின் வாழும் ஆண்களில் 80% பேருக்கு புகைப் பழக்கம் உள்ளது.
பெண்களில் 6% பேர் மட்டுமே புகைக்கின்றனர். இந்த ஏழை நாட்டின் கலாசாரத்தில் புகையிலை ஓர் அங்கம். ஒரு அட்டை சிகரெட் ஒரு டாலருக்கும் குறைவாகவே உள்ளது.
புகையிலை குறித்த எச்சரிக்கை விளம்பரங்களும் அதிகமாக பயனளிப்பதில்லை. காரணம் அங்கு பாதிப்பேருக்கு படிக்கத் தெரியாது.
5.ரஷ்யா
ரஷ்யாவில் 15 வயதுக்கும் அதிகமான 60% ஆண்களும், 23% பெண்களும் புகைப்பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர்.
பணியிடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் புகைக்க அங்கு தடை உள்ளது. புகைப்பழக்கம் உலகில் பத்தில் ஒரு மரணத்துக்கு காரணமாக உள்ளது. அவற்றில் கால்வாசி மரணங்கள் ரஷ்யாவில் நிகழ்கின்றன.
குறைவாக புகைப்பழக்கம் உள்ள நாடுகள்
கானா, எத்தியோப்பியா, நைஜீரியா, எரிட்ரியா மற்றும் பனாமா ஆகிய நாடுகளில் புகைப்பழக்கம் குறைவாக உள்ளது.
உலக சராசரியான 22% விடவும் 14% ஆப்பிரிக்கர்களே புகைப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஆப்பிரிக்காவில் புகைப்பவர்களில் 70% – 85% ஆண்கள். பெண்களுக்கு குறைவான பொருளாதார சுதந்திரமே உள்ளதால் அவர்களிடையே புகைக்கும் பழக்கமும் குறைவாக உள்ளது.
பெண்கள் புகைப்பதும் அங்கு ஒழுக்கச் சீர்கேடாகப் பார்க்கப்படுகிறது.
கானா, எத்தியோப்பியா, நைஜீரியா ஆகிய நாடுகள் உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாடு தொடர்பான விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துகின்றன.
‘காட்’ எனும் போதை உண்டாக்கும் இலையும் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் மெல்லப்படுகிறது. அதானல் அங்கு புகைப்பழக்கம் குறைவாக உள்ளது.
உலக அளவில் 10 லட்சம் பேர் காட் இலைகளை பயன்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
அதிகம் தயாரிக்கும் நாடு
சீனாதான் உலகிலேயே அதிக அளவில் புகையிலையை பயன்படுத்தும் மற்றும் தயாரிக்கும் நாடு.
அங்கு சுமார் 30 கோடிப் பேர் புகைக்கின்றனர். இது உலகில் புகைப்பவர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு.
கடந்த இரண்டு தசாப்தங்களில் முதல்முறையாக 2016இல் சீனாவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பெண்களிடையே புகைப்பழக்கம்
ஆண்களைவிட பெண்கள் அதிகமாக புகை பிடிக்கும் ஒரே நாடு டென்மார்க். இங்கு 19.3% பெண்களும், 18.9% பெண்களும் புகை பிடிக்கின்றனர்.
ஆண்கள் மற்றும் பெண்களிடையே புகைபிடிக்கும் விகிதம் குறைவாக உள்ள ஐரோப்பிய நாடுகளில்தான் புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
உலகம் முழுவதும் புகையிலையால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் சுற்றியுள்ளவர்களின் புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களும் அடக்கம்.
உயிரிழப்பவர்களில் 60 லட்சம் பேர் நேரடியான புகைப்பழக்கத்தால் இறப்பவர்கள்.
உலகில் புகைப் பழக்கம் உள்ள 110 கோடி பேரில் 80% பேர் குறைவான மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் புகையிலைப் பொருட்களின் மதிப்பு 770 பில்லியன் டாலர். -BBC_Tamil