காபூல், அமெரிக்க நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் நகர உலக வர்த்தக மையம் மீதும் விமானங்களை மோதி பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.
2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடந்த இந்த தாக்குதல்கள், உலக வரலாற்றின் கருப்பு அத்தியாயம் ஆகும்.
இந்த தாக்குதல்களை தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தப் போரின் மூலம் அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலீபான்களை அமெரிக்கா விரட்டியடித்தது.
அதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையிலான அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தலீபான் பயங்கரவாதிகள் ஆயுதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆதிக்கமும் செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 25 நாடுகள் கலந்துகொண்ட அமைதி மாநாடு நடந்தது. அதில் அந்த நாட்டின் அதிபர் அஷரப் கனி பங்கேற்று பேசியபோது, தலீபான் பயங்கரவாதிகளை நிபந்தனையற்ற நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அத்துடன் போர் நிறுத்தம் செய்யும் திட்டத்தையும், கைதிகளை விடுவிக்கும் திட்டத்தையும் அவர் வெளியிட்டார். அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை ஆராய்ந்து மாற்றி அமைக்கவும் அவர் முன் வந்தார்.
ஆனால் தலீபான் பயங்கரவாதிகள் அதை ஏற்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அமெரிக்க கூட்டுப்படையினரையும், உள்நாட்டுப் படையினரையும், போலீஸ் படையினரையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி, நாட்டு மக்களுக்கு நேற்று டெலிவிஷனில் உரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து அவர் டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது.
நோன்புக்காலம் முடியும் வரை யில் (ஜூன் மாதம் 20-ந்தேதி) தலீபான்களுடன் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும். அவர் கள் நடத்தி வருகிற வன்முறை பிரசாரம் (பயங்கரவாத தாக்குதல்கள்) மக்களின் இதயங்களையும், மனங்களையும் கவர்ந்து இழுக்காது. அதற்கு பதிலாக அவர்களை தீவு போன்று தனிமைப்படுத்தும். இதை தலீபான்கள் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
இந்த போர் நிறுத்த அறிவிப்புடன், நாங்கள் அரசாங்கத்தின் வலிமையையும், ஆப்கானிஸ்தான் மோதல்களுக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு அவற்றில் கூறப்பட்டு உள்ளது.
-dailythanthi.com