இசுலாமியர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ள அதிபர் ட்ரம்ப்

நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் பல இசுலாமிய நாட்டு தூதர்களை வரவேற்று  இப்தார் விருந்து வைத்து சிறப்பித்தார்.

வருடா வருடம் அமெரிக்க அதிபராக இருப்பவர்கள் இசுலாமியர்களின் பண்டிகையான ரமலானை பொருட்டு இப்தார் விழா வெள்ளை மாளிகையில் வைப்பது வழக்கம். ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்பு கடந்த ஆண்டு இப்தார் விருந்து வெள்ளை மாளிகையில் வைக்கப்படவில்லை.

ட்ரம்பும்  தேர்தலலிருந்தே இசுலாமியர்களை விமர்சித்தே வந்தார். அதிபராக பொறுப்பேற்ற பின்பு ஐந்து இசுலாமிய நாடுகளான ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்தார். ட்ரம்ப் இசுலாமியர்களின் விரோதி போலவே நடந்துகொண்டார்.  இதனால் கடந்த ஆண்டு இப்தார் விருந்தளிக்கவில்லை.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று எல்லோருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இப்தார் விருந்து அளித்தார். இந்த விருந்தில் சவூதி அரேபியாவின் தூதர் இளவரசர் காலித் பென் சல்மான், ஜோர்டான் தூதர் டினா கவார், இந்தோனேசிய தூதர் என்று பலர் பங்கேற்றனர்.

இவர்களிடையில் பேசிய அதிபர் ட்ரம்ப், “இங்கு வந்துள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக உள்ள நாடுகளின் தூதுவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்தில் பங்கேற்று எங்களைக் கவுரப்படுத்தி இருக்கிறீர்கள். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்குள்ள ஒவ்வொருவருக்கும் உலகிலுள்ள இசுலாமியர்களுக்கும் ரமலான் முபாரக். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றினால் மட்டுமே எல்லோருக்கும் பாதுகாப்பு, வளர்ச்சியை நாம் அடைய முடியும்” என்று கூறினார். இந்த விருந்திற்கு பல இசுலாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளை மாளிகைக்கு வெளியிலேயே இப்தார் நடத்தியிருக்கின்றனர்.

-nakkheeran.in