2016ஆம் ஆண்டு ஒக்டோபரிலிருந்து இவ்வாண்டு பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில், ஐக்கிய அமெரிக்க – மெக்ஸிக்கோ எல்லையில், கிட்டத்தட்ட 1,800 குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன என, ஐ.அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய அமெரிக்காவின் குடிவரக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2017ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்ற பின்னர், மேலும் இறுக்கமாக்கப்பட்ட நிலையிலேயே, இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த அதிகாரியால் வழங்கப்பட்ட தரவுகளில், ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தின் இறுதி 3 மாதங்களும் உள்ளடங்கியுள்ள போதிலும், அக்காலத்தில் குடும்பங்கள் பிரிக்கப்பட்டனவா என்பது தெரியவரவில்லை.
தன்னை வெளிப்படுத்த விரும்பாத இவ்வதிகாரியால் வழங்கப்பட்ட இத்தகவல்கள், அண்மைக்காலத்தில் வழங்கப்பட்ட, மிக அதிகமான எண்ணிக்கையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையைக் காட்டுகிறது.
மருத்துவக் காரணங்கள், பாதுகாப்புக் காரணங்கள் ஆகியன, பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் அல்லது பிள்ளைகள் பிரிக்கப்படுவதற்கான காரணங்களாக அமைந்தன எனத் தெரிவித்த அவ்வதிகாரி, போலியாகப் பெற்றோராக நடிக்கின்றனர் என்ற சந்தேகத்திலும், சில குடும்பங்கள் பிரிக்கப்பட்டன என்றார்.
-tamilmirror.lk