ஜி7 மாநாட்டில் கனடா “நேர்மை இல்லாமல்” நடந்து கொள்வதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோவை, “நேர்மையற்றவர் மற்றும் பலவீனமானவர்” என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த கனடா பிரதமர் ட்ரூடோ, “கனடா மக்கள் அமைதியானவர்கள், ஆனால் எப்படி வேண்டுமானாலும் எங்களை நடத்த முடியாது” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு கனடாவில் உள்ள தமிழர்களும், பத்திரிகைகளும், பிரமுகர்களும் டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
டிரம்பின் விமர்சனம் பற்றி கனடா வாழ் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்டோம்.
கனடாவின் கால்கரியில் வசிக்கும் சுப்பிரமணி, “வயதாயிற்றே தவிர்த்து பேச்சில் முதிர்ச்சி இல்லை. கோட்பாட்டில் வேறுபாடு இருக்கலாம். அதை பகிரங்கமாகவும் கூறலாம். ஆனால் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும். உலகமே வேடிக்கை பார்க்கிறது” என்றார்.
எட்மண்டனில் இருந்து புஷ்பா என்பவர், “இந்த மாதிரி நான் பேசினால் என் அம்மாவிடமிருந்து அடி கிடைத்திருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி கிளின்டன் கூறியுள்ளார். அப்படி தான் எனக்கும் தோன்றுகிறது” என்றார்.
“டிரம்ப் இந்த மாதிரி பேசி, பேசிதான் பாப்புலர் ஆகியிக்கிறார். ஆனால் இது கொஞ்சம் ஓவர்தான்,” என செபாஸ்டியன் கூறினார்.
கனடா பத்திரிகைகளின் பதிலடி
”டிரம்பின் வார்த்தைகளும், செயல்களும் விட்டுச் சென்ற குழப்பங்களினால் G7 ஆடிவிட்டது. G7னில் ஒன்று குறைந்து G6 ஆகிவிட்டால் அல்லது G7 கலைந்து விட்டால் என்ன ஆகும்?” என்ற முதல் கேள்வியை கனடாவில் பல பத்திரிக்கைகளில் பார்க்க முடிந்தது.
“நேர்மையற்ற, முதிர்ச்சியற்ற, நம்பிக்கை துரோகி ” போன்ற கடினமான வார்த்தைகள் டிரம்பிற்குதான் பொருந்தும். G7 மாநாட்டில் கோபமாக, சகஜமாக இல்லாமல் இருந்தது டிரம்ப் தான்” என்று டொராண்டோ ஸ்டார் பத்திரிகை கூறியுள்ளது.
“தற்பெருமை விரும்பும் டிரம்ப், மாநாடு பிரமாதமாக நடந்ததற்கு டிரம்ப் தான் காரணம் என்று ட்ரூடோ கூறுவார் என்றும் அமெரிக்காவின் கட்டண ஏற்றத்திற்கு கனடா பதிலடி கொடுக்காது என்றும் எண்ணியிருப்பார்” என தி குளோப் அண்டு மெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
“டிரம்ப் சம்பந்தமே இல்லாத விஷயங்களைச் சம்பந்தப்படுத்துவதில் வல்லவர். அவர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளினால் அமெரிக்க கனடா உறவு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது” என்று கனடா ப்ராட்காஸ்டிங் தொலைக்காட்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மெக்கே கூறியுள்ளார்.
ஒரு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் டிரம்பின் வார்த்தைகளை “குப்பை பேச்சு” என்றும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
-BBC_Tamil